அமீரக செய்திகள்

‘கடவுளுக்கு நன்றி. அமீரகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டது.’.. அபுதாபி இளவரசர் பகிர்ந்த வீடியோ..!!

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பானது 200 க்கும் குறைவாக இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகம் படிப்படியாக இயல்பு நிலையை மீட்டெடுத்து வருகிறது.

நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அதே போல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிகின்றனர் மற்றும் குடியிருப்பாளர்கள் விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு சென்று வருகின்றனர்.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், கொரோனா நெருக்கடியைக் கடந்து நாடு சில பாடங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் “ஐக்கிய அரபு அமீரகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியதற்கு, நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்,” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சமீபத்தில் கொரோனா நெருக்கடியின் மோசமான காலம் முடிந்துவிட்டது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“தொற்றுநோய்களின் போது ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அணியாக செயல்பட்டது, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமீரகத்தை உலக அளவில் சிறந்த நாடாக மாற்றியது” என்று அவர் ஆகஸ்ட் மாதம் அமீரக அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு ட்வீட் செய்திருந்தார்.

கொரோனாவின் பாதிப்பை முன்னிட்டு அமீரகம் கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சில தினசரி நோய்த்தொற்றுகள் குறைவதன் காரணமாக மெதுவாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

தொற்றுநோயை எதிர்கொள்வதில் உலக அளவில் அமீரகம் முதலிடத்தில் உள்ளது. செப்டம்பரில், லண்டனை தளமாகக் கொண்ட பகுப்பாய்வு கூட்டமைப்பான DKG (Deep Knowledge Group) உலகின் பாதுகாப்பான நகரமாக கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக விரைவான செயல்பாடுகளை மேற்கொண்டதன் விளைவின் அடிப்படையில் அபுதாபியை அறிவித்துள்ளது. உலக தரவரிசை அறிக்கையில் துபாய் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அமீரகத்தில் 20.2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 95 சதவிகித மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 85 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!