அமீரக செய்திகள்

அமீரகத்தில் இடி, மின்னலுடன் இரவு முழுவதும் பெய்த கனமழை.. குறிப்பிட்ட இடங்களில் இன்று ஆன்லைன் வகுப்புகள், தொலைதூர வேலை…

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று (வியாழன், அக்டோபர் 26) இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் (NCM) அறிவித்துள்ளது. மேலும் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் இரவு முழுவதும் விடாது மழை பெய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து பெரும்பாலான பகுதிகளில் மரை பெய்ததன் காரணமாக அமீரகவாசிகள் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர்.

துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட பல்வேறு எமிரேட்களிலும் தீவிரமான மழை கொட்டித் தீர்த்ததால், NCM நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் கனமழை காரணமாக துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாயில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இன்று அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை தொலைதூர வேலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், துபாயில் உள்ள பல தனியார் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பெற்றோருக்குத் தெரிவித்துள்ளன.

அதேபோல், அனைத்து தனியார் துறை நிறுவனங்களும், வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை முறைகளை வழங்குமாறு மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) வலியுறுத்தியுள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் அபுதாபி மற்றும் துபாயின் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்வதைப் பார்க்கலாம். இதற்கிடையில், புயல் மையம் துபாயின் அல் குத்ரா பகுதியில் இன்று பெய்த கனமழையின் வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

மேலும், இன்றிரவு மற்றும் சனிக்கிழமை காலை நேரங்களில் வானிலை ஈரப்பதமாக இருக்கும் என்றும் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் NCM கூறியுள்ளது. சில சமயங்களில் தூசி நிறைந்த வானிலை ஏற்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19 ° C வரைக் குறையும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 ° C வரை அதிகரிக்கும் என்றும் NCM எச்சரித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!