அமீரக செய்திகள்

UAE: இனி வாரத்தின் எல்லா நாட்களிலும் இந்த பகுதிகளில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம்…!! புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ஷார்ஜா முனிசிபாலிட்டி…!!

அமீரகத்தில் பொதுவாகவே வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தாலும் விடுமுறை நாட்களில் பெரும்பாலான இடங்களில் வாகன பார்க்கிங் இலவசமாகவே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக ஷார்ஜாவில் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் இனி வெள்ளிக்கிழமை, விடுமுறை நாட்கள் என வாரத்தின் ஏழு நாட்களும் குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இருக்ககூடிய மம்சார் கார்னிச் (Mamzar corniche) மற்றும் அல் கான் (Al khan) பகுதிகளில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்து கொள்ளும் சேவையை ஷார்ஜா அறிமுகப்படுத்தியுள்ளது. ஷார்ஜா முனிசிபாலிட்டி இந்த புதிய கட்டணத்தைப் பற்றிய தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளது.

அத்துடன் அல் மம்சார் கார்னிச் ஸ்ட்ரீட் மற்றும் அல் கான் பகுதிகளில் பார்க்கிங் இடங்களுக்கான கட்டணங்கள் பிப்ரவரி 14 முதல் செலுத்தப்படும என்றும் கூறியுள்ளது. மேலும், இந்த பார்க்கிங் இடங்கள் வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொது வாகன நிறுத்துமிடங்களைச் சேர்த்து, அவற்றைக் கட்டணத்திற்கு உட்படுத்தும் அதிகாரிகளின் வருடாந்திரத் திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கை உள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் சிரமமின்றி பார்க்கிங் இடங்களைக் கண்டறிய உதவும் என கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் பொது பார்க்கிங் இடத்திற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹமும், இரண்டு மணிநேரத்திற்கு 5 திர்ஹமும் மற்றும் மூன்று மணிநேரத்திற்கு 8 திர்ஹமும் ஆகும். ஷார்ஜா டிஜிட்டல் ஆப், SMS அல்லது சந்தாக்கள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்திக்கொள்ளலாம்.

ஷார்ஜா நகராட்சியின் பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் அலி அகமது அபு காஜியன் கூறுகையில், “இந்த நடவடிக்கை வாகன நிறுத்துமிடங்களை அபகரிப்பதை தடுக்கும். பலர் தங்கள் வாகனங்களை நீண்ட நேரம் விட்டுவிட்டு அப்படியே சென்று விடுகிறார்கள். ஷார்ஜாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக அல் மம்சார் பகுதி இருப்பதால் கட்டண வாகன நிறுத்துமிடங்களை நகராட்சி உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வாரம் மற்றும் விடுமுறை நாட்களில் பார்க்கிங் கட்டணம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக நீல நிற அறிவுறுத்தல் பலகைகளையும் (blue instruction signboards) நகராட்சி நிறுவியுள்ளது.

வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகிப்பதற்காக ஆய்வுக் குழுக்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!