அமீரக செய்திகள்

UAE: நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை.. கனமழைக்குத் தயாராக இருக்க NCM எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி உட்பட ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை இடைவிடாமல் நேற்று பெய்து வந்த நிலையில், இன்று செவ்வாய் கிழமை அதிகாலை முதலே மீண்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் அல் அய்ன் பகுதியில் இன்று காலை ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.

அதேசமயம், துபாயிலும் நேற்று இரவு நேரத்தில் பெய்த இடி மின்னலுடன் கூடிய லேசான மழையை துபாய்வாசிகளும் அனுபவித்துள்ளனர். மேலும், துபாயில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நாடு முழுவதும் நேற்று இரவு முதல் பல்வேறு எமிரேட்களை கனமழை தாக்கி வருவதால், அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டில் நிலவும் அபாயகரமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, அபுதாபி மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், குடியிருப்பாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அமீரகத்தின் தேசிய  வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலையற்ற வானிலை நிலவும் போதும், கனமழை மற்றும் பலத்த காற்றின் போதும் குடியிருப்பாளர்கள் போதுமான அளவு தயாராக இருப்பதை உறுதிசெய்யவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NCM கூறியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்கவும்:

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, அபுதாபி காவல்துறை சில முக்கிய சாலைகளில் தற்காலிக வேகக் குறைப்பு முறையைச் செயல்படுத்தியுள்ளது, ஆகவே, போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அபுதாபி – அல் அய்ன் இடையேயான சாலையி்ல் அல் ஹஃபர் பாலம் முதல் பனியாஸ் பாலம் வரையிலும் மற்றும் அபுதாபி – துபாய் இடையேயான ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலையில் அல் ஷஹாமா பாலம் முதல் அல் நௌஃப் பாலம் பாலம் வரையலும் வேகவரம்பு மணிக்கு 80 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வாறான நிலையற்ற வானிலை நிலவும் சூழலில் விழிப்புடன் இருக்குமாறும், பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் பொதுமக்களை உள்துறை அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

  • எச்சரிக்கையாக செயல்படவும்
  • சாலைகளில் வேகத்தைக் குறைக்கவும்
  • நீர் குளங்கள் மற்றும் வேகமாக நகரும் நீரோடைகளில் இருந்து விலகியிருக்கவும்.
  • கடல் மற்றும் கடற்கரைகளைத் தவிர்க்கவும்

வானிலை நிலவரம்:

NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நாடு முழுவதும் வெப்பச் சலன மேகங்கள் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சில பகுதிகளில் பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் குறிப்பாக நள்ளிரவு முதல் நாளை நண்பகல் வரை இடி மற்றும் மின்னல் ஏற்படும் என்றும், கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, வியாழன் இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டை பாதிக்கும் மற்றொரு வானிலை இருப்பதாகவும், மேலும் இது சனிக்கிழமை உச்சத்தை அடையும் என்று அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!