அமீரக செய்திகள்

பிக் டிக்கெட்டில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியரை தேடி வந்த நிலையில் தற்பொழுது ஓமானில் கண்டறியப்பட்டுள்ளார்.!!

அபுதாபியில் நேற்று (ஜனவரி 3 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் இந்தியாவை சார்ந்த அப்துஸ்ஸலாம் என்ற நபர் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. பிக் டிக்கெட் குழுவினர் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுது அவர் வழங்கியிருந்த இரு எண்களில் ஒரு எண் தவறானதாகவும் மற்றுமொரு தொலைபேசி எண் நாட் ரீச்சபிள் என்றும் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவரது எண்ணை தொடர்பு கொண்ட போது மலையாள மொழியில் பேசியதன் மூலம், அவர் கேரளாவை சேர்ந்தவர் என்று கணிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிக் டிக்கெட் குழுவினர் அப்துஸ்ஸலாமை கண்டறிய உதவுமாறு சமூக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், தற்பொழுது பல மணி நேர தேடலுக்குப் பிறகு பிக் டிக்கெட்டின் வெற்றியாளரான அப்துஸ்ஸலாம் கண்டறியப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த 28 வயதான அப்துஸ்ஸலாம் N.V, ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வருவதாகவும் அங்கு அவர் ஒரு ஷாப்பிங் சென்டரில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் டிக்கெட்டை வாங்கியபோது, தனது ஓமான் மொபைல் எண்ணுக்கான இன்டர்நேஷனல் கோட் +968 க்கு பதிலாக இந்திய தொலைபேசி குறியீடு +91 ஐ தவறாகப் பதிவிட்டதன் காரணமாக, பிக் டிக்கெட் குழுவினரால் அவரை உடனடியாக அணுக முடியவில்லை என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது.

வெற்றி பெற்றதை குறித்து அப்துஸ்ஸலாம் கூறும் போது, “நான் இந்திய தொலைபேசி குறியீட்டைக் கொடுத்தேன் என்பதை உணரவில்லை. நான் பிக் டிக்கெட்டை இதுவரை 5 முறை வாங்கியுள்ளேன். நான் வெற்றி பெற்ற இந்த பரிசுத்தொகையை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனக்கு வரும் தொகையினை எனது எதிர்காலத் திட்டத்திற்காகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் செலவழிக்க விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவர் 323601 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை கடந்த டிசம்பர் 29 ம் தேதி அன்று வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!