அமீரக செய்திகள்

UAE: இதை மட்டும் செய்தால் ஈத் அல் அதாவிற்கு 9 நாள் லீவு கிடைக்கும்.. டிரை பண்ணிதான் பாருங்களேன்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் எதிர்வரக்கூடிய ஜூன் மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள, இஸ்லாமியர்களின் இரண்டு பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டின் மிக நீண்ட விடுமுறையாக சுமார் ஆறு நாட்களுக்கு தொடர் விடுமுறையை அனுபவிக்க உள்ளார்கள்.

வானியல் கணக்கீடுகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள், 29 அல்லது 30 நாட்கள் என சந்திர அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜின் 9 முதல் 12 வரையிலான நாட்களுக்கு விடுமுறையை அனுபவிப்பார்கள். அதாவது ஆங்கில மாதத்தில் ஜூன் 27 செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 2 ஞாயிற்றுக்கிழமை வரை ஈத் அல் அதாவிற்கு விடுமுறை அளிக்கப்படும்.

அதனடிப்படையில், கடந்த ஏப்ரலில் ஈத் அல் பித்ர் பண்டிகையில் குடியிருப்பாளர்கள் அனுபவித்த நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இந்த ஆண்டின் இரண்டாவது நீண்ட விடுமுறையாக ஈத் அல் அதாவிற்கும் அரசாங்கம் நான்கு நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. எனினும் இந்த நான்கு நாட்களை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானோருக்கு இது ஆறு நாட்கள் விடுமுறையாக கிடைக்கும்.

இருப்பினும் இந்த ஆறு நாட்கள் விடுமுறை ஒரு சில குடியிருப்பாளர்களுக்கு ஒன்பது நாட்களாகவோ அல்லது பத்து நாட்களாகவோ அமையலாம். குறிப்பாக ஈத் அல் அதா பண்டிகையை சொந்த நாட்டில் கொண்டாட விரும்புபவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, ஒரே ஒரு நாளுக்கு மட்டும் சம்பளம் இல்லா விடுமுறைக்கு விண்ணப்பித்தால் போதும்.

ஏனெனில், இவ்வருடத்தின் ஈத் அல் அதா விடுமுறையானது ஜூன் 27 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்குகிறது. எனவே அதற்கு முந்தைய நாளான ஜூன் 26, திங்கள்கிழமை அன்று விடுமுறை எடுத்துக்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், ஜூன் 24 ம் தேதி சனிக்கிழமை முதல் ஜூலை 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை என தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறையாக அமையும்.

இவ்வாறு செய்வதன் மேலம் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற எமிரேட்களில் உள்ள ஊழியர்கள் ஒன்பது நாள் விடுமுறையை அனுபவிக்கும் பட்சத்தில், ஷார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் குடியிருப்பாளர்கள் பத்து நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும். ஏனெனில் ஷார்ஜாவில் வார விடுமுறை நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என்பதால் அவர்களுக்கு ஜூன் 23 முதல் ஜூலை 2 வரை என பத்து நாட்கள் விடுமுறையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!