அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிக எடையுள்ள வாகனங்களுக்கு அக்டோபர் 1 முதல் தடை..!! கண்காணிக்க புதிய ஸ்மார்ட் கேட் நிறுவ முடிவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 65 டன் எடைக்கு மேல் சுமைகள் கொண்ட கனரக வாகனங்கள் தேசிய சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த புதிய சட்டமானது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தற்பொழுது கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் விதிமீறல் புரிந்தால் அதற்கான அபராதங்களானது வரும் பிப்ரவரி 1, 2024 முதலே நடைமுறைக்கு வரும் எனவும், இதனால் கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த இடைப்பட்ட நான்கு மாத கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் பின் முகமது அல் மஸ்ரூயி அவர்கள், இது நாட்டில் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், இந்த சட்டத்தின் கீழ், எல்லை கடக்கும் டிரக்குகள் உட்பட 150,000 கனரக வாகனங்கள் இருக்கும் என்றும், பாதுகாப்பு, ராணுவம், போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சொந்தமான கனரக வாகனங்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்மார்ட் கேட்கள்:

நாடு முழுவதும் உள்ள டிரக்லோட்களில் 28 சதவீதம் 65 டன்களுக்கு மேல் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நான்கு மாத காலத்திற்குள் நாட்டின் தேசிய சாலைகளில் ஸ்மார்ட் கேட்கள் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் கேட்களில் உள்ள துல்லியமான தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள், 3D லேசர் ஸ்கேனர்கள் மற்றும் எலக்ட்ரானிக் சென்சார்கள் அதிகபட்ச சுமைகளைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களைக் கண்டுபிடிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

சாலைகளில் ஆபத்துகளை விளைவிக்கும் அதிக எடை கொண்ட வாகனங்கள்:

இதற்கிடையில், RoadSafetyUAE இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், வாகனங்களின் எடை சாலையின் தேய்மானம் மற்றும் சேதத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், நாட்டின் உள்கட்டமைப்பை முடிந்தவரை நல்ல நிலையில் பராமரிப்பது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக, அதிக எடை கொண்ட வாகனங்களைக் கட்டுப்படுத்தி நிறுத்த பிரேக்குகள் அதிக வேலை செய்ய வேண்டும். இதனால் சிலசமயங்களில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தி இறப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு ஏற்பட்ட பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஆகஸ்ட் 11, 2023 – துபாயில் ஷேக் முகமது பின் சையத் சாலையில் பிக்கப் மற்றும் டிரக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.
  • ஜனவரி 25, 2023 – புஜைராவின் சகாம்காமில் உள்ள யாப்சா தெருவில் டிரக் கவிழ்ந்ததில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
  • அக்டோபர் 27, 2022 – ஷேக் முகமது பின் சையத் சாலையில் இரண்டு டிரக்குகள் மற்றும் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல வாகன விபத்தில் ஒரு ஓட்டுநர் மரணித்த நிலையில்,  ஐந்து பேர் காயமடைந்தனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!