அமீரக செய்திகள்

UAE : உலகின் மிகப்பெரிய பள்ளி நிறுவனங்களில் ஒன்றான GEMS பள்ளியின் நிறுவனர் மரியம்மா வர்கி காலமானார்..!!

துபாயில் தனியார் கல்வித்துறையின் முன்னோடியான முதல் ஜெம்ஸ் பள்ளியின் நிறுவனர் மரியம்மா வர்கி அவர்கள் நேற்று துபாயில் உள்ள தனது மகனின் இல்லத்தில் காலமானார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.

ஜெம்ஸ் (GEMS) கல்வியின் நிறுவனரும் தலைவருமான சன்னி வர்கியின் தாயார் மரியம்மா வர்கி புதன்கிழமை துபாயில் காலமானார் என்று GEMS குழு தெரிவித்துள்ளது. இவர் துபாயில் 1968 ம் ஆண்டு Our Own English High School எனும் பள்ளியை நிறுவினார். கடந்த சில ஆண்டுகளாகவே படுக்கையில் இருந்த அவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவரது மகன் சன்னி வர்கி, மறைந்த மரியம்மா வர்கி அவர்களின் இறுதி சடங்குகள் அடுத்த திங்கட்கிழமை ஜபேல் அலி மார்த்தோமா தேவாலயத்தில் நடைபெறும் என்றும் செவ்வாய்க்கிழமை ஒரு மெய்நிகர் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கான விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“மேடம் வர்கி ஒரு சிறந்த கல்வியாளராக இருந்தார், அவர் ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறந்த கல்விக்கு தகுதியானவர் என்று நம்பினார். கற்பித்தல் மீதான அவரது நீடித்த ஆர்வத்தினால் உந்தப்பட்டு, தனது கணவருடன் சேர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலும் மற்ற நாடுகளிலும் கல்வி மற்றும் கற்றலின் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். மறைந்த மரியம்மா வர்கி அவர்கள் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, கடந்த 60 ஆண்டுகளில் ஜெம்ஸ் பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவரின் இதயத்திலும் என்றும் நிலைத்திருப்பார்” என்று வர்கி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேடம் வர்கி என்று பரவலாக அறியப்பட்ட, 89 வயதான மரியம்மா, இந்தியாவின் கேரளாவை சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஆவார். அம்மாச்சி என்று அழைக்கப்படும் மரியம்மா, துபாயின் கல்வி முறையில் முன்னோடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது முன்னாள் மாணவர்களில் பலர் துபாயில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

1959 ல் இந்தியாவில் இருந்து தனது கணவர் கே.எஸ்.வர்கியுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தார். இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வந்து, தொடர்ந்து இங்கு வாழ்ந்த முதல் இந்தியப் பெண்களில் ஒருவர் இவர் ஆவார். கடந்த 2010 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வசிக்கும் மூத்த கேரளப் பெண்ணாக மலையாள செய்தித்தாள் அவரைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!