ADVERTISEMENT

சவுதி அரேபியா : இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு..!!! சவுதி மன்னர் அறிவிப்பு..!!!

Published: 23 Mar 2020, 8:11 AM |
Updated: 23 Mar 2020, 8:15 AM |
Posted By: jesmi

சவுதி அரேபியா நாட்டின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்கள், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவானது இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை 21 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை காக்கும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவானது மார்ச் 23 திங்கள் கிழமை (இன்று) மாலை முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், மேலும் அனைத்து சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இது தொடர்பாக அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முக்கிய பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு, ராணுவம், ஊடகம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய சுகாதார மற்றும் சேவை துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், மிக அவசரத்தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.