ADVERTISEMENT

துபாயில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 திர்ஹம் அபராதம்..!! துபாய் காவல்துறை எச்சரிக்கை..!!

Published: 14 Apr 2020, 2:43 PM |
Updated: 14 Apr 2020, 2:43 PM |
Posted By: jesmi

துபாயில் முக கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1000 திர்ஹம் அபராதம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று (ஏப்ரல் 14, 2020) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பாக பொது வெளியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயம் என்று காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் தனியாகவோ அல்லது இரண்டு மூன்று நபர்களுடன் சென்றாலோ முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் அதை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில தினங்களில், முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என 233 நபர்களுக்கு எச்சரிக்கை செய்தும் 5 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாகவும் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, துபாய் காவல்துறையின் போக்குவரத்து துறை இயக்குனர் (Director of Traffic Department at Dubai Police) பிரிகேடியர் சைப் முஹைர் அல் மஸ்ரூயி (Brigadier Saif Muhair Al Mazroui) கூறுகையில், கொரோனாவிற்கான அறிகுறி இல்லாவிட்டாலும் முக கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை பற்றி சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (Ministry of Health and Prevention – MoHAP) அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசைனி (Dr. Farida Al Hosani) கூறியுள்ளார். எனவே, வாகனத்தில் பயணிக்கும் போது முக கவசம் அணிய வேண்டும் என்று துபாய் காவல்துறை சார்பாக சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர் கூறுகையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் அதே தவறை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முக கவசம் அணியாதவர்கள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டால், அவர்களின் மொபைல் போனிற்கு முதலில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என்றும், அதன் பின்பே அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்..

ADVERTISEMENT