ADVERTISEMENT

அமீரகத்தில் தாயகம் செல்ல விரும்புவோர் ரிஜிட்ரேஷன் செய்து கொள்ளலாம்..!! இந்திய தூதரகம் அறிவிப்பு…!!

Published: 30 Apr 2020, 2:16 AM |
Updated: 30 Apr 2020, 2:21 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே சிக்கியுள்ளனர். இதில் பல இந்தியர்கள் வேலை இல்லாமலும், வேலையை இழந்தும், குறைந்த சம்பளத்துடனும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் வெளிநாடுகளிலேயே சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு காரணங்களால் நாடு திரும்ப விரும்பும் அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு புதன்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் மின்னணு பதிவு (e-registration) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தாயகம் செல்ல விரும்பும் இந்தியர்களின் தகவல் சேகரிக்கும் விவரங்களை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் “தற்போதைய கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலையில் இந்தியா செல்ல விரும்பும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் விபரங்களை சேகரிப்பதற்கான பொது அறிவிப்பு. இதில் பதிவு செய்ய https://cgidubai.gov.in/covid_register/ என்ற இணையதளத்தை அணுகவும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தாயகம் செல்ல விரும்பும் அமீரகத்தில் இருக்கும் இந்தியர்களுக்காக ஒரு தரவுத்தளத்தை (database) உருவாக்கி விபரங்களை சேகரிப்பதற்காக ஒரு படிவத்தை (form) பதிவேற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தாய்நாடு செல்ல விரும்பும் இந்தியர்கள் அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வலைத்தளம் அல்லது துணைத்தூதரகத்தின் வலைத்தளம் வாயிலாகவோ அல்லது நேரடியாக https://cgidubai.gov.in/covid_register/ என்ற லிங்கின் மூலமாகவோ தங்களின் விபரங்களை ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இந்த தகவல் சேகரிப்பு தொடர்பாக இந்திய தூதரகம் தெரிவிக்கையில், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருவதற்கு இந்திய அரசு திட்டமிட உதவுவதற்காகவே விபரங்கள் சேகரிக்கப்படுவதாக இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த படிவம் ஒரு நேரத்தில் ஒரு தனி நபருக்கு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். என்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், நிறுவனங்களும், தங்களின் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு தனி படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில், இந்தியாவிற்கு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு தூதரகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை படிவங்களில் நிரப்புவதை தவிர, “இந்தியாவிற்கு திரும்பிச் செல்வதற்கான கட்டாயக் காரணம்” மற்றும் “அவர்களின் கொரோனா பரிசோதனை நிலவரம்” (நேர்மறை, எதிர்மறை அல்லது சோதனை செய்யப்படவில்லை) ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும், படிவத்தை நிரப்பும்படி கேட்டுக்கொள்வது தகவல் சேகரிப்புக்காக மட்டுமே என்றும், இதனால் இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் பதிவு செய்யப்படுவதாக அர்த்தம் இல்லை என்றும் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், கர்ப்பிணிப் பெண்கள், வயதான நோயாளிகள், வேலை தேடி விசிட் விசாவில் வந்திருப்பவர்கள் மற்றும் வேலை இழந்தவர்கள் போன்ற பல இந்தியர்கள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட லாக்டவுன் போன்ற சிக்கல்களால் தாயகம் திரும்ப முடியாமல் அதற்கு உதவுமாறு தங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று ஏற்கெனவே கேரள மாநில அரசாங்கத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா செல்ல விரும்பும் மலையாளிகள் தங்கள் விபரங்களை கேரள அரசு அறிமுகப்படுத்திய வலைதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து இலட்சக்கணக்கிலான மலையாளிகள் பதிவு செய்ததை தொடர்ந்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பையொட்டி தூதரகம் வெளியிட்டுள்ள வலைத்தளத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களின் விபரங்களை பதிவிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.