ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்கள் வேலை இழப்பை தடுக்க 9 பில்லியன் ரியால்கள்..!! தனியார் துறையை மேம்படுத்த 50 பில்லியன் ரியால்கள்..!! சவூதி மன்னர் ஒப்புதல்..!!

Published: 16 Apr 2020, 5:18 PM |
Updated: 16 Apr 2020, 5:18 PM |
Posted By: jesmi

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளிக்கும் விதமாக சவூதி அரசாங்கம் மெகா திட்டத்தினை அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் கூடுதலாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் துறைக்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் சவுதி அரேபியாவின் மன்னர் கிங் சல்மான் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் என்று சவூதி நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தனியார் துறையின் நிலுவைத் தொகையை விரைவுபடுத்துவதற்கும், பல துறைகளுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதற்கும், கொரோனவால் பெரிதும் பாதிக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களின் ஊதியத்தை ஈடுகட்டவும் 50 பில்லியன் ரியால்கள் இந்த திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுளளதாக நிதியமைச்சர் முகமது அல் ஜாதான் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 15) கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் 47 பில்லியன் ரியால்கள் சவூதி அரேபிய நாட்டின் சுகாதாரத் துறையை மேலும் கட்டமைப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார். அத்துடன் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கங்களைத் தடுக்கும் பொருட்டு அவர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை ஈடுகட்டும் வகையில் 9 பில்லியன் ரியால்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதத்தில், சவூதி அரேபியா பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வணிகர்களுக்கு உதவும் வகையில் 70 பில்லியன் ரியால்களை ஒதுக்கியிருந்தது. மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சில கட்டணங்கள் மற்றும் வரிகளையும் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

30 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவூதி அரேபியாவில் தற்போது வரையிலும் கொரோனாவிற்கு 6,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும்.

ADVERTISEMENT

வளைகுடா நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் விமான போக்குவரத்தை நிறுத்தி வைப்பது, ஊரடங்கு உத்தரவு விதிப்பது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பெரும்பாலான பொது இடங்களை மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. இதுவரையிலும் வளைகுடா நாடுகளில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 130க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றானது குறைந்த வருமானம் கொண்ட, சிறிய அறையில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்களிடையே அதிகம் பரவுவதாக வளைகுடா நாடுகளில் உள்ள பல நாடுகளும் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக, நெரிசலான தங்குமிடங்களில் வசிக்கும் தொழிலாளர்களை அழைத்து வந்து சவூதி அரேபியாவில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் 3,400 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தங்கவைக்கப்படுவர் என்று சவூதி அரேபிய நாட்டின் கல்வி அமைச்சர் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். அண்டை நாடான பஹ்ரைன் இதே போன்று தங்கள் நாட்டு தொழிலாளர்களை பள்ளிகளில் தங்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.