ADVERTISEMENT

இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி..!! உள்துறை அமைச்சகம் தகவல்..!!

Published: 29 Apr 2020, 7:58 PM |
Updated: 29 Apr 2020, 8:00 PM |
Posted By: jesmi

இந்தியாவில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருவது நாம் அறிந்ததே. ஊரடங்கு அறிவித்த பின்னர் பலர் தங்களின் சொந்த ஊருக்கு நடை பயணமாகவே பல நூறு கிலோமீட்டர் நடந்து சென்றதில் சிலர் உயிரிழந்த பல சோக நிகழ்வுகளும் நடந்துள்ளன. தற்பொழுது இந்தியாவில் இது ஒரு பெரும் சிக்கலாகவே உருவாகியுள்ளது. இந்நிலையில், இவ்வாறு சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற மாநில மக்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 29) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி தெரிவிக்கையில், வெவ்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் மக்களை அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பற்றி கூறும் போது வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் நபர்களை அவரவர் மாநிலங்களுக்கு அழைத்து கொள்ளலாம். இரு மாநிலங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் போன்றவர்களை தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து போக்குவரத்திற்காக பேருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்றும், அது முறையாக சுத்திகரிக்கபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணிப்பவர்கள் இருக்கைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கூறுகையில், இது தொடர்பான நிபந்தனைகளை முறையாக பட்டியலிட்டு, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து, அவ்வாறு சிக்கித் தவிக்கும் நபர்களை அழைத்து வருவதற்கும், ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு அனுப்புவதற்கும் நிலையான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ சிக்கி தவிப்பவர்கள் அங்கிருந்து வேறு மாநிலத்திற்கோ அல்லது யூனியன் பிரதேசத்திற்கோ செல்ல விரும்பினால், இரு மாநில அரசுகளும் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து சாலை வழியாக அனுப்புவதற்கோ அல்லது அழைத்து வருவதற்கோ பரஸ்பரம் ஒப்புக் கொள்ளலாம் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் மேலும் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய நபர்கள் தங்களின் சொந்த மாநிலங்களை அடைந்த பின்னர், உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் மேலும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT