ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு..!! UAE அமைச்சரவை கூட்டத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்றம்..!!

Published: 8 Apr 2020, 6:09 PM |
Updated: 8 Apr 2020, 6:13 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் கொரோனாவால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் கொரோனாவின் தாக்கத்தை ஒட்டி, பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார அளவில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு ஊழியர்கள் சம்பளக் குறைப்பு மற்றும் பணியிடை நீக்கம் போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum) அவர்கள் தலைமையில் தற்போது நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை கூட்டத்தின் போது, சில குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக முழு ஊதிய விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று இன்று நடைபெற்ற தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வயது நிபந்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கணவன் மனைவி இருவரில் எவரேனும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் முடிவின் பேரில் சுய தனிமைப்படுத்தலுக்கு (Self Quarantine) உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கும் வயது நிபந்தனை பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் சுகாதாரம் தொடர்பான முக்கிய தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், தொற்று ஏற்பட்டவர்களுக்கான பரிசோதனைக்கு துணை இருக்கும் பிற மருத்துவ ஊழியர்கள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்த தீர்மானம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் படி, சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது கூட்டாட்சி ஆணையம், அத்தியாவசிய தேவைக்கு தொழில்நுட்ப முறையில் பணிபுரியும் ஊழியர்களை விடுப்பு எடுப்பதற்கு பதிலாக தொலைதூர முறையில் (Remote System) வேலை செய்யுமாறு கேட்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தேவைப்படும் கடின முயற்சி, கூடுதல் வேலை நேரம், தொற்று ஏற்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருப்பது போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் ​​ஊழியர்களை ஆதரிப்பதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதற்கும், மேலும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் பொருட்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமீரக அமைச்சரவையின் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.