ADVERTISEMENT

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அமீரகம் வரும் இந்திய மருத்துவ குழு..!! அமீரக அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு முடிவு..!!

Published: 2 May 2020, 12:40 PM |
Updated: 2 May 2020, 12:45 PM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ்சிற்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவும் வகையில் அமீரக அரசால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று 88 சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட இந்திய மருத்துவக் குழுவின் முதல் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவக்குழுவின் முதல் அணியில் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 88 பேரை உள்ளடக்கிய குழுவை அமீரகத்திற்கு அனுப்ப இந்திய அரசு அனுமதித்துள்ளது என்று புதுடெல்லியில் உள்ள இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க இந்தியாவை சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 88 பேரை உள்ளடக்கிய மருத்துவ குழுவை மிகவும் குறுகிய காலத்திற்குள் அமீரகத்திற்கு அனுப்ப இந்திய அரசு அனுமதித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. இது அமீரகம் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளின் மீது இந்திய அரசு கொண்டுள்ள சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “துபாய் மருத்துவமனைகளில் பணிபுரிந்து இப்போது இந்தியாவில் விடுமுறைக்கு சென்றுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனே திருப்பி அனுப்புமாறு அமீரக அதிகாரிகள் எங்களிடம் கோரியுள்ளனர். இந்த கோரிக்கையை இந்திய அரசும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கூறியதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT