ADVERTISEMENT

துபாயை வந்தடைந்த இந்திய மருத்துவக்குழு..!! கொரோனாவிற்கு எதிராக அமீரகத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு..!!

Published: 9 May 2020, 5:23 PM |
Updated: 9 May 2020, 5:23 PM |
Posted By: jesmi

கொரோனாவிற்கான போராட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற, முதற் கட்டமாக மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 88 நபர்கள் அடங்கிய மருத்துவ குழு, இன்று அமீரகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்தியாவிலிருந்து மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமீரகத்தில் மருத்துவ சேவையில் பணியாற்றி வரும் அஸ்டெர் DM ஹெல்த்கேர் நிறுவனத்தின் செவிலியர்கள் அடங்கிய இந்த குழு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமீரகத்திற்கு சொந்தமான ஃபிளைதுபாய் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 வை தற்போது வந்தடைந்துள்ளனர் என செய்தி வெளியிடபட்டுள்ளது.

இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் செவிலியர்கள், இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இயங்கிவரும் அஸ்டெர் DM ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர்களிலிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்று, ஊரடங்கு மற்றும் விமான போக்குவரத்துக்கு தடையால் அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்ட, அமீரக மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களும் இந்த விமானத்தில் திரும்பி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த மாத தொடக்கத்தில், புதுடெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம், அமீரகத்திற்கு மருத்துவ குழுவை அனுப்ப இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கும் இடையே இந்திய அரசு கொண்டுள்ள சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

“துபாய் மருத்துவமனைகளில் பணிபுரிந்து இப்போது இந்தியாவில் விடுமுறைக்கு வந்துள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை திருப்பி அனுப்புமாறு அமீரக அரசு எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை இந்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் கடந்த வாரம் அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT