ADVERTISEMENT

உலகெங்கிலும் உள்ள ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கு விமான டிக்கெட் இலவசம்..!! கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதிரடி..!!

Published: 12 May 2020, 7:10 AM |
Updated: 12 May 2020, 7:40 AM |
Posted By: jesmi

உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா தொற்று நோயின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் கவனித்துக்கொண்ட முன்னணி சுகாதார நிபுணர்களின் வீர செயல்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கு இரண்டு விமான பயண டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று (மே 11, 2020) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உலகில் உள்ள பல நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு தடையின் காரணமாக வெவ்வேறு நாடுகளில் சிக்கி தவித்தவர்களை, 100 க்கும் அதிகமான சாட்டர்ட் விமானங்களை (chartered flights) பயன்படுத்தியது உட்பட, 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை திருப்பி அனுப்புவதற்காக கத்தார் ஏர்வேஸ் மேற்கொண்ட பணி பரவலாக பாராட்டுகளை பெற்றது. மேலும் பயணிகளும் அரசாங்கங்களும் இந்த பணிக்காக நன்றியை தெரிவித்திருந்தனர். சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான உலகளாவிய முயற்சிகளின் முன்னணியில் விமான சேவைகளின் பங்கு அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு, இப்போது உலகின் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த இலவச டிக்கெட் பெற முற்படுபவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான நேரம் மே 12 அன்று நள்ளிரவு 00.01 மணிக்கு தொடங்கி மே 18 அன்று நள்ளிரவு 23:59 மணிக்கு மூடப்படும் (தோஹா நேரம்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஹெல்த்கேர் வல்லுநர்கள் இந்த பிரத்யேக சலுகையை qatarairways.com/ThankYouHeroes என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்களின் இலவச டிக்கெட்களை உறுதி செய்துகொள்ளலாம். மேலும் அந்த வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம், இந்த ப்ரோமோஷனிற்கான குறியீட்டு எண்ணை (promotion code) பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இலவச டிக்கெட்டானது “முதலில் வந்தவர்களுக்கே முதலில் வழங்கப்படும் (first come – first served)” என்ற அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய சுகாதார வல்லுநர்கள் அனைவரும் இந்த இலவச டிக்கெட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள் எனவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்ணப்ப செயல்முறை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு நாடும் அதன் மக்கள்தொகை அளவைப் பொறுத்து ஒதுக்கப்பட்டிருக்கும் இலவச டிக்கெட்டுகளை மே 12 முதல் 18 வரையிலான ஏழு நாட்களிலும் பெறமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் மூலம் ப்ரோமோஷனிற்கான குறியீட்டு எண்ணை பெறும் 100,000 சுகாதார வல்லுநர்கள், கத்தார் ஏர்வேஸால் இயக்கப்படும் விமானங்களில் எகானமிக் வகுப்புகளில் (Economic Class), சென்று வருவதற்கான இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. சுகாதார வல்லுநர்கள் தங்களின் துணையுடன் சென்று வரும் பொருட்டு இந்த இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த இலவச டிக்கெட்டுகளை கத்தார் ஏர்வேஸ் சேவை வழங்கக்கூடிய எந்த நாடுகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச டிக்கெட்டுகள் நவம்பர் 26 க்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், விமான பயணம் 10 டிசம்பர் 2020 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. விமான நிலைய சர்வீஸ் கட்டணத்தை தவிர டிக்கெட் மீதான அனைத்து சர்வீஸ் கட்டணங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி, அதிமேதகு திரு. அக்பர் அல் பேக்கர், “சவாலான இந்த காலங்களில் மக்களைக் கவனித்துக்கொண்டிருக்கும் உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கருணை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில் திறன் ஆகியவற்றில் அவர்களின் செயல்பாடு உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இலவச விமான டிக்கெட்டுகள் தவிர, சுகாதார நிபுணர்களுக்கு கத்தார் டூட்டி ஃபிரீ விற்பனை நிலையங்களில் பயன்படுத்திக்கொள்ள கூடுதலாக 35% தள்ளுபடியுடன் ஒரு வவுச்சர் வழங்கப்படும் என்றும், இந்த வவுச்சர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் (HIA) 31 டிசம்பர், 2020 வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர், மருத்துவ பயிற்சியாளர், செவிலியர், துணை மருத்துவர், பார்மசிஸ்ட், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர் உள்ளிட்டோர் இந்த இலவச விமான டிக்கெட்டுகளை பெற தகுதி உடையவர்கள் எனவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணம் மேற்கொள்ளும்போது செக்-இன் கவுண்டரில், தங்களின் மருத்துவ துறைக்கான ஐடியை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கத்தார் ஏர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.