ADVERTISEMENT

அமீரகத்திலிருந்து மதுரை, திருச்சி, கோவை, சென்னைக்கு சிறப்பு விமானம்..!! பயண திட்ட அட்டவணை வெளியீடு..!!

Published: 24 May 2020, 5:15 PM |
Updated: 24 May 2020, 5:49 PM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையானது கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவந்த இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அடுத்த கட்ட திட்டத்தின் படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு நான்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட இருப்பதாக அமீரகத்திற்கான இந்திய தூதரகத்தின் சார்பாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் அட்டவணைப்படி, முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 2 ஆம் தேதி கோவைக்கு ஒரு விமானமும், இரண்டாவதாக துபாய் விமான நிலையத்திலிருந்து ஜூன் 3 ஆம் தேதி திருச்சிக்கு ஒரு விமானமும், மூன்றாவதாக ஜூன் 4 ஆம் தேதி மதுரைக்கு ஒரு விமானமும், கடைசியாக ஜூன் 8 ஆம் தேதி சென்னைக்கு ஒரு விமானமும் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வந்தே பாரத் திட்டத்தின் முதல் வார நடவடிக்கையில், தமிழகத்திற்கு 11 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்,
இரண்டாம் கட்ட நடவடிக்கையில் தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் இயக்கப்படாமல் இருந்தது, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் தாயகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்த பலருக்கும் பெரும் ஏமாற்றதை அளித்திருந்தது. இந்நிலையில் மே 26 முதல் தொடங்கவிருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை சார்ந்த மொத்தம் 81 விமானங்கள் மூலம் நடைபெற இருக்கும் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் உலகளவில் இருக்கும் சுமார் 14,000 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT