ADVERTISEMENT

மாலத்தீவிலிருந்து இந்தியர்களை அழைத்து கொண்டு கொச்சிக்கு புறப்பட்ட இந்திய போர்க்கப்பல்..!! அடுத்த கப்பல் தூத்துக்குடிக்கு செல்லும் எனவும் தகவல்..!!

Published: 9 May 2020, 10:49 AM |
Updated: 9 May 2020, 10:53 AM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கமாக அழைத்து வரும் ‘சமுத்ரா சேது’ எனும் திட்டத்தின் முதல் கட்டமாக, மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்தை நோக்கி இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ஜலஷ்வா எனும் போர்க்கப்பல் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை மாலத்தீவின் தலைநகரான மாலியின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வியாழக்கிழமை மாலத்தீவு துறைமுகத்தை வந்தடைந்த INS ஜலஷ்வா கடற்படைக்கப்பல், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த இந்திய நாட்டு மக்களை ஏற்றிக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொச்சி துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலானது வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 10 ஆம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு செல்லும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனாவிற்கான வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கப்பலில் 19 கர்ப்பிணி பெண்கள், 14 சிறுவர்கள் உள்ளிட்ட 698 இந்தியர்கள் கொச்சி துறைமுகத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர். அதிகளவில் மக்களை அழைத்து செல்லும் பொருட்டு, சமுத்ரா சேது திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் கடற்படை கப்பல்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்படை சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும், இந்த கப்பலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுத்தியாக, கொரோனாவிற்கான பாதுகாப்பு உபகரணங்கள், நிவாரண பொருட்கள் போன்றவற்றுடன் மருத்துவ மற்றும் நிர்வாக ஊழியர்களும் பயணிக்கின்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக மாலத்தீவிற்கு இரண்டு கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றான INS ஜலஷ்வா நேற்று கொச்சி துறைமுகத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய நிலையில், அடுத்தகட்டமாக INS மாகர் எனும் மற்றுமொரு கப்பல் மாலத்தீவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து கொண்டு தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்தை சென்றடையும் என்றும் கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலானது வரும் மே 12 ஆம் தேதி மாலத்தீவிலிருந்து புறப்பட்டு வரும் மே 14 ம் தேதி தூத்துக்குடி வந்தடையும் என அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.

இந்த சமுத்ரா சேது திட்டத்தின் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகளுக்கும் கடற்படை கப்பல்களை அனுப்பி அங்கிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வர இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், அமீரகத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் பொருட்டு, துபாய்க்கு கடந்த மே 5 ஆம் தேதி ஒரு கப்பல் தனது பயணத்தை தொடங்கிய நிலையில், மேற்கொண்டு 14 கப்பல்கள் வளைகுடா
நாடுகளுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும், மதிய அரசின் உத்தரவு கிடைத்தவுடன் வளைகுடா நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் என்று இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.