ADVERTISEMENT

UAE : சிறப்பு விமானத்தில் இந்தியா செல்ல பணமின்றி தவிப்பவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் அல் ஆதில் நிறுவன சேர்மன்..!!

Published: 3 Jun 2020, 9:54 AM |
Updated: 3 Jun 2020, 9:54 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பால் வேலையை இழந்தவர்கள் மற்றும் வேலை தேடி அமீரகத்திற்கு வந்தவர்களில் தற்பொழுது சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு செல்ல காத்துக்கொண்டிருக்கும் பலரும், விமான டிக்கெட்டிற்கான பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இவ்வாறு சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் மற்றும் கொரோனா பரிசோதனைக்கான உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அல் ஆதில் டிரேடிங் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் தனஞ்சய் தாதர் உதவி செய்ய முன்வந்துள்ளார். அதன் படி, இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளின் விமான டிக்கெட்டிற்கான பணத்தையும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தையும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாக்டர் தனஞ்சய் தாதர் கூறுகையில், “அமீரகத்தில் வேலை இழந்திருக்கும் பல நபர்கள் இந்திய அரசால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம், தாயகத்திற்கு செல்வதற்கான விமான டிக்கெட்டையும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தையும் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது எனக்கு புரிகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, நாடு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், “இது தொடர்பாக தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக பின்பற்றப்படும். நான் துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி விபுல் அவர்களிடம், அமீரகத்தில் இருந்து நாடு செல்ல கஷ்டப்படும் இந்தியர்களுக்கான விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை செலுத்த விரும்புவதாக கூறினேன். எனது இந்த சிறிய முயற்சி பயனளிக்கும் என்றும் நான் நம்புகிறேன்”.

“இதே போல், எனது சக குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து, அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விரைவில் மீண்டு வர முற்படுவோம். இதனால் இந்த நெருக்கடியை நாம் விரைவில் சமாளிக்க முடியும். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் முயற்சிகளுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் தாதார் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

டாக்டர் தாதார் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உதவியை பெற விரும்புவோர் +971 50 675 9191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.