ADVERTISEMENT

இந்தியாவிற்கு சார்ட்டர் விமானங்களை இயக்க புதிய நெறிமுறையை வெளியிட்ட இந்திய அரசு..!! ஜூன் 25 முதல் அமல்..!!

Published: 25 Jun 2020, 5:37 PM |
Updated: 25 Jun 2020, 6:10 PM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்தியா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பல கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்த திட்டத்தில், மூன்றாம் கட்ட அறிவிப்பின் போது சிறப்பு விமானம் இயக்க தனியார் விமான நிறுவனங்களுக்கும் மற்றும் தனியார் அமைப்பின் மூலமாக சார்ட்டர் விமானங்கள் இயக்கவும் இந்திய அரசு அனுமதி அளித்து அதற்காக நிலையான இயக்க நெறிமுறையையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தனி விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படுவதை தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய நிலையான இயக்க நெறிமுறையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி இன்று (ஜூன் 25) முதல் இந்தியாவிற்கு தனி விமானங்களை இயக்க கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

1. சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்யும் அமைப்பினர் அலலது குழுவினர், ஒரு விமான போக்குவரத்து ஆபரேட்டரை (ATO) அடையாளம் காண வேண்டும்.

2. விமான போக்குவரத்து ஆபரேட்டர்கள் தாங்கள் செல்ல கூடிய விமான நிலையத்தில் தரையிறங்க அம்மாநில அரசின் அனுமதி பெறுவதற்கு, தங்களின் விமானத் திட்டங்கள், மாநில அனுமதி படிவங்கள் மற்றும் பயணிகளின் விபரங்களை நேரடியாக அனுப்ப வேண்டும். மேலும் அதன் நகலை தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் விபரங்களை தூதரகங்கள் கண்காணிக்கும் அதே வேளையில், விமான போக்குவரத்து ஆபரேட்டர்கள் மாநில அரசின் அனுமதியை நேரடியாக எழுத்துப்பூர்வமாக பெறுவதற்கு முற்பட வேண்டும்.

ADVERTISEMENT

3. விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியை மாநில அரசிடம் இருந்து விமான போக்குவரத்து ஆபரேட்டர்கள் பெற்றவுடன், பயணிகளை ஏற்றி செல்வதற்கான “நோ அப்ஜெக்சன் செர்டிபிகேட்” ஐ தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

4. மாநில அரசின் அனுமதி மற்றும் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திடமிருந்து “நோ அப்ஜெக்சன் செர்டிபிகேட்” பெறப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு சிவில் ஏவியேஷன் பொது இயக்குநகரத்தை (DGCA) அணுக வேண்டும்.

5. மாநில அரசும் விமான போக்குவரத்து ஆபரேட்டர்களும், பயணிகளை இந்தியாவிற்கு ஏற்றி செல்வது தொடர்பான விமான பயண திட்டம் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நிர்வகித்துக்கொள்ளலாம். அதே போன்று பயணிகளில் கலப்பு குடிமக்கள் இருக்கும் பட்சத்தில் இருவரும் ஒருங்கிணைந்து நிர்வகித்துக்கொள்ள வேண்டும்.

6. பயணிகளை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்யும் அமைப்பினர் அல்லது குழுவினர், மாநில அரசுகளுடன் சேர்ந்து நேரடியாக இறுதி செய்ய வேண்டும்.

7. சார்ட்டர் விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு பட்டியல் இந்திய மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து ஆபரேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இனிமேல் விமான போக்குவரத்து ஆபரேட்டர்கள் தங்களது சார்ட்டர் விமானங்களின் அட்டவணையை அவர்களுடன் சேர்ந்து உருவாக்க முடியும்.

மேலும் இது தொடர்பாக அந்த அறிக்கையில், “தனி விமானம் இயக்குவது தொடர்பாக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் செயலாக்கப்பட்ட திட்டங்கள், விமான போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. தனி விமானங்களை ஏற்பாடு செய்யும் அமைப்பினர் அல்லது குழுவினர் தங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால் அதன் தற்போதைய நிலை குறித்து விமான போக்குவரத்து ஆபரேட்டர்களுடன் சரிபார்க்கலாம். ஏற்கனவே செயலாக்கப்பட்ட விமான பயணங்களுக்கு இந்த புதிய கோரிக்கைகள் செயல்படுத்த வேண்டியதில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.