ADVERTISEMENT

பஹ்ரைன் : திறந்த வெளியில் பணிபுரிபவர்களுக்கான மதிய இடைவேளை ஜூலை 1 முதல் தொடக்கம்..!! அமைச்சகம் அறிவிப்பு..!!

Published: 27 Jun 2020, 10:27 AM |
Updated: 27 Jun 2020, 10:32 AM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளை பொறுத்தவரை கோடைகாலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக மதிய வேளைகளில் நேரடியாக சூரியனுக்கு கீழே அல்லது திறந்த வெளிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை கொடுப்பது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான கோடைகாலம் ஆரம்பித்ததை முன்னிட்டு வெயிலின் தாக்கம் தற்பொழுது அதிகமாகவே இருக்கின்றது. எனவே, இந்த வருடத்திற்கான கோடைகாலத்தை முன்னிட்டு மற்ற வளைகுடா நாடுகளில் வழங்கப்பட்டு வரும் மதிய நேர இடைவேளையானது பஹ்ரைனில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திறந்த வெளிகளில் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான தடை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும் என பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை கட்டளை 39/2013 ஐ அமல்படுத்துவதற்கான மேற்பார்வை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிப்புற வேலைகளைத் தடைசெய்வது, தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, வெப்பச் சோர்வு மற்றும் வெயிலுக்கு எதிராக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கோடை தொடர்பான நோய்களைத் தடுப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த தடை அறிவிக்கப்பட்டு செயலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளில் சராசரியாக 98 சதவீத தனியார் துறை நிறுவனங்கள் இந்தத் தடைக்கு இணங்கியுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்வதில் நிறுவனங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த ஆணைக்கு அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்கள் மீது அரசின் விதிமுறைகளின் படி, 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 500 முதல் 1000 பஹ்ரைன் தினார் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT