ADVERTISEMENT

இனி மரத்தை நடுவதற்கும் ட்ரோன்தான்.. ட்ரோன் மூலம் ஒரு மில்லியன் மாங்குரோவ் விதைகளை நடவு செய்த அபுதாபி..!

Published: 18 Jan 2023, 8:42 PM |
Updated: 18 Jan 2023, 9:10 PM |
Posted By: Menaka

உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் வகையிலும், சதுப்புநிலங்களைப் (Mangroves) பாதுகாப்பதற்கு ஆராய்ச்சி செய்வதற்கான உலகளாவிய மையமாக அபுதாபியை நிலைநிறுத்தவும், பல்வேறு திட்டங்களையும் முயற்சியையும் முன்னெடுத்து வருகிறது அபுதாபி. இதன் ஒரு பகுதியாக அபுதாபியாக சதுப்பு நில காடுகளை உருவாக்கும் வண்ணம் 1 மில்லியன் மாங்குரோவ் விதைகளை சமீபத்தில் அபுதாபி நடவு செய்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் துவங்கப்பட்டுள்ள மாங்குரோவ் தோட்டத் திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கையாக, இந்த ஒரு மில்லியன் மாங்குரோவ் விதைகளை ட்ரோன் மூலம் நடவு செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அபுதாபியின் இந்த மாங்குரோவ் தோட்ட திட்டமானது அப்போது பிரிட்டனில் இளவரசராக இருந்த வில்லியம் அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகைபுரிந்த போது அறிவிக்கப்பட்டது.

அமீரகத்தின் இந்த முயற்சியானது 2021 இல் கிளாஸ்கோவில் COP26 இன் போது அறிவிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இலக்கை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் படி 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 மில்லியன் மாங்குரோவ் விதைகள் நாடு முழுவதும் நடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்ரோன்களால் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பயன்படுத்தி பெரிய அளவில் மாங்குரோவ் பகுதிகளை பயன்படுத்துவதற்கும் அவற்றை நடுவதற்கும் உண்டான செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக EAD (Environment Agency – Abu Dhabi) உள்ளது. EAD நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான முதல்கட்டத்தை தொடர்ந்து ஒரு மில்லியன் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலில் அபுதாபியில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ட்ரோன் மூலம் மாங்குரோவ் விதைகளை நடவு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு அதில் 48 சதவீதம் வரை வெற்றியும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அல் தஃப்ரா பிராந்தியத்தில் அல் மிர்ஃபாவைச் சுற்றியுள்ள வெவ்வேறு இடங்களில் ட்ரோன்கள் மூலம் ஒரு மில்லியன் விதைகள் நடவு செய்யப்பட்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியான தகவலின்படி, 2030 ஆம் ஆண்டில் நூறு மில்லியன் மாங்குரோவ் விதைகளை நடும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இலக்கிற்கு ஆதரவாக, அபுதாபி எடுத்து வரும் பல திட்டங்களில் இந்தத் திட்டமும் ஒன்று என EAD இன் பொதுச்செயலாளர் டாக்டர் ஷேக்கா சலேம் அல் தாஹேரி கூறியுள்ளார்.

எனவே, ஒவ்வொரு நடவுச் சுற்றிலும் காற்றில் இருந்து விதைகளை தூவவும், மரக்கன்றுகளின் வளர்ச்சியை கண்காணிக்கவும், 3D இமேஜிங்கை உருவாக்கவும் ட்ரோன்கள் நவீன முறையில் வடிவமைக்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.