ADVERTISEMENT

UAE: ஆடம்பர காரில் வந்து பிச்சையெடுத்த பெண்.. கட்டுக் கட்டாக பணம்.. மடக்கி பிடித்த போலீஸ்..!!

Published: 22 Jan 2023, 4:43 PM |
Updated: 22 Jan 2023, 7:09 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிச்சை எடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து சொகுசு கார் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருப்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி காவல்துறையினர் தெரிவிக்கையில், சென்ற ஆண்டு நவம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை சுமார் 159 பிச்சைக்காரர்களை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன் குடியிருப்பாளர் ஒருவர், ஒரு பெண் பிச்சை எடுப்பதாக சந்தேகத்தின்பேரில் புகாரளித்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை காவல்துறை கண்காணித்து வந்ததில், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு முன்னால் அமர்ந்து அவர் பிச்சை எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பிச்சை எடுத்த பிறகு நீண்ட தூரம் நடந்து சென்று அவரது சொகுசு காரில் செல்வதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவையனைத்தும் பிச்சை எடுத்து அந்நபர் சேர்த்து வைத்தவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பிச்சை எடுப்பது சமூகக் கொடுமை என்றனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிச்சை எடுப்பது குற்றம் மற்றும் நாகரீகமற்ற செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தின் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, பிச்சை எடுத்தால் மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம், குழுவாக ஒருங்கிணைந்து பிச்சை எடுத்ததற்கான தண்டனையாக ஆறு மாதச் சிறை மற்றும் 100,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காவல்துறையின் கூற்றுப்படி, பிச்சை எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, ரம்ஜான் மாதத்தில் பிச்சை எடுப்பதை தடுக்க காவல்துறையின் சிறப்பு குழுக்கள் எப்போதும் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

ஆகையால், பொது மக்கள் பாதுகாப்பு சேவைத் துறையைத் தொடர்பு கொண்டு எந்தவொரு சட்டவிரோத செயலையும் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கள் 8002626 (AMAN2626) என்ற கட்டணமில்லா எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது 2828 க்கு குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது மின்னஞ்சல் (aman@adpolice.gov.ae) மூலமாகவும் புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.