அமீரக செய்திகள்

உலகளவில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த நகரங்களில் முதலிடம் பிடித்த துபாய்.. துபாய் இளவரசர் ட்வீட்..

பிரபல பயண நிறுவனமான Trip Advisor நடத்திய டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளின்படி, உலகளவில் 2023 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடமாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை துபாயின் இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உலகளாவிய 3 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக துபாயை மாற்றுவது உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் D33 திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், 2023 ம் ஆண்டிற்கான டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளில் துபாய் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருதுகளானது ட்ரிப் அட்வைசர் வெப்சைட்டில் மில்லியன் கணக்கான பயணிகள் சமர்ப்பிக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் முதல் 10 இடங்களை பிடித்த நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்கள்

  1. துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
  2. பாலி, இந்தோனேஷியா
  3. லண்டன், UK
  4. ரோம், இத்தாலி
  5. பாரிஸ், பிரான்ஸ்
  6. கான்கன், மெக்சிகோ
  7. கிரீட், கிரீஸ்
  8. மராகேஷ், மொராக்கோ
  9. டொமினிக்கன் குடியரசு
  10. இஸ்தான்புல், துருக்கி

உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டில், உலகின் அனைத்து நகரங்களுக்கும் மத்தியில் அதிக சுற்றுலா செலவினங்களைப் பெற்ற நகரமாகத் துபாய் திகழ்ந்துள்ளது என்றும் துபாயில் இந்த செலவினம் 108 பில்லியன் திர்ஹம்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2023ம் ஆண்டின் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த அறிக்கையில், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பிராந்திய ரீதியாக முதல் இடத்தையும், உலகளவில் ஐந்தாவது இடத்தையும் துபாய் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!