அமீரக செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனம்: நாளையுடன் முடியும் போக்குவரத்து அபராத தள்ளுபடி.. நினைவூட்டிய ஷார்ஜா காவல்துறை..!!

ஷார்ஜா காவல்துறை அதன் சமூக வலைதளங்களில் வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. காவல்துறையின் அறிவிப்பின்படி, வாகன ஓட்டிகள் போக்குவரத்து அபராதத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடியைப் பெற்று பயனடைவதற்கான இறுதி நாள் ஜனவரி 20 என்று நினைவூட்டியுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இந்த தள்ளுபடியை பயன்படுத்தி உள்துறை அமைச்சகம் (MOI) அல்லது ஷார்ஜா காவல்துறையின் செயலி மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடியானது கடந்த நவம்பர் 29, 2022 அன்று, ஷார்ஜா எக்சிகியூட்டிவ் கவுன்சிலின் முடிவின் அடிப்படையிலும் 51வது தேசிய தினத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் கொண்டாட்டங்களின் அடிப்படையிலும் ஷார்ஜாவில் வழங்கப்பட்டுள்ளது என்று ஷார்ஜா காவல்துறை அறிவித்திருந்தது.

ஆகவே, கடுமையான அத்துமீறல் செயல்களைத் தவிர, ஷார்ஜாவில் நிகழ்ந்த அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்றும், அதுபோல, டிசம்பர் 1, 2022க்கு முன் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு இந்த தள்ளுபடியானது பொருந்தும் என்றும் ஷார்ஜா காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள பதிவின்படி, போக்குவரத்து விதிகளை அத்துமீறுபவர்களும், வாகன உரிமையாளர்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும் தள்ளுபடியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்துவதை விரைவுபடுத்தவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்க்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் அபராதம் குறித்த பதிவில், ஷார்ஜா போலீஸ் இணையதளம், உள்துறை அமைச்சகத்தின் செயலி மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள Sahl கட்டணமுறை போன்றவற்றின் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்தமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் தள்ளுபடி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்கள் பறிமுதல் செய்வதையும் போக்குவரத்து புள்ளிகளையும் ரத்து செய்வதாகவும் தீர்மானம் வெளியிட்டுள்ளனர். அதேசமயம், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அபராதங்களை செலுத்துமாறு காவல்துறை வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!