அமீரக செய்திகள்

துபாய்: டாக்ஸி கட்டணத்தை அதிரடியாக குறைத்த RTA.. இன்று முதல் அமல்..!!

துபாயில் பொது போக்குவரத்தில் பெரிதும் பங்கு வகிக்கும் டாக்ஸியின் கட்டணத்தில் மாற்றம் செய்து புதிய கட்டணத்தை RTA அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோமீட்டருக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தில் 22 ஃபில்ஸ் குறைக்கப்படுவதாகவும், இது இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் RTA கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலையானது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் டாக்ஸியின் கட்டணத்தை குறைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RTA வின் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷக்ரி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், டாக்ஸி கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 2.19 திர்ஹம்சிலிருந்து 1.97 திர்ஹம்சாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அமீரகத்தில் வழக்கமாக எரிபொருளின் விலை உயரும்போதும் சரியும்போதும், டாக்ஸியின் கட்டணத்தில் இது போன்ற தாக்கம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமீரகத்தில் தொடர்ச்சியாக கடந்த நான்கு மாதங்களாக எரிபொருள் விலை குறைந்து வருவதால் இந்த கட்டணத்தை குறைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பின்படி, லிமோசின் உட்பட அனைத்து வகையான டாக்ஸிகளுக்கும் இந்த கட்டண மாற்றம் பொருந்தும் என்றும், இது வாடிக்கையாளர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் ஜனவரி 2023 க்கான சில்லறை எரிபொருள் விலையை கணிசமாகக் குறைத்து கடந்த டிசம்பர் 30 ம் தேதி புதிய பட்டியலை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த கட்டணக் குறைப்பின் மூலம், டாக்ஸியில் 20 கிலோமீட்டர் பயணம் செய்யும் ஒரு பயணிக்கு 4.40 திர்ஹம்ஸ் மிச்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் துபாயில் டாக்ஸி கட்டணக் குறைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. அதே சமயம் ஷார்ஜாவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்ஸி கட்டணத்திலிருந்து 1 திர்ஹம் குறைக்கப்பட்டது. அதற்கடுத்தபடியாக அஜ்மானில் டாக்ஸி கட்டணம் ஆறு சதவீதம் குறைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு எரிபொருள் விலை சரிந்ததே இந்த கட்டண குறைப்பிற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!