அமீரக செய்திகள்

பத்து வருட காத்திருப்பிற்குப் பிறகு திறக்கப்படவுள்ள புதிய அபுதாபி விமான நிலைய டெர்மினல்.. அடேங்கப்பா! இவ்ளோ வசதிகள் இருக்கா..

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியி்ல் கட்டப்பட்டு வந்த மிட்ஃபீல்டு டெர்மினல் (Midfield Terminal) எனும் புதிய விமான நிலையத்தின் திறப்பு விழாவனது,  அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற வாய்ப்புள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அபுதாபியின் இந்த புதிய டெர்மினலுக்கான கட்டுமானப்பணி, சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.

அதாவது, இந்த கட்டுமானம் 2012 இல் தொடங்கப்பட்டு அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து 2017 இல் பணிகள் முடிவடைய இருந்தது. ஆனால், சில சவால்கள் காரணமாக கட்டுமானப்பணி தாமதமானதால் 2019 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இதன் திறப்பு விழா தள்ளிப்போனது. இதனையடுத்து, தற்போது புதிய விமான நிலைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ழுமையாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பயணிகளின் பயணத்தை எளிமையாக்க, அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும் நேரத்திலிருந்து அவர்கள் இலக்கை அடைய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்டுள்ள அபுதாபியின் மிட்ஃபீல்ட் டெர்மினல் கட்டிடம் ஒரு மணி நேரத்திற்கு 11,000 பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு இடவசதி கொண்டுள்ளதாகவும், ஆண்டுக்கு சுமார் 45 மில்லியன் பயணிகளை கையாலும் அளவிற்கு இந்த புதிய விமான நிலையம் திறன் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய விமான நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தவுடன், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டெர்மினல்கள் நிரந்தரமாக மூடப்படும் என்றும், விமான போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும்போது அந்த டெர்மினல்கள் ரிமோட் போர்டிங் லாஞ்சாக (LOUNGE) பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதைய புதிய டெர்மினலுக்கு செல்ல சுரங்கப்பாதை இருப்பதால் பயணிகளுக்கு எளிதான இணைப்புகளை உண்டாக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அபுதாபி விமான நிலையத்தின் இந்த மிகப்பெரிய டெர்மினல் சுமார் 700,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதாகவும், மேலும் தொடக்கத்தில் அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸின் (Abu Dhabi’s Etihad Airways) வளர்ச்சியை ஆதரிப்பதற்காக திட்டமிடப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அபுதாபியின் இந்த மிட்ஃபீல்ட் டெர்மினல் 10.8 பில்லியன் திர்ஹம் ($2.94 பில்லியன்) செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

இது குறித்து ஊடகங்கள் கூறுகையில், 2020 ஆம் ஆண்டில், அபுதாபி ஏர்போர்ட்ஸ் புதிய மிட்ஃபீல்ட் விமான நிலைய டெர்மினலை இயக்கவும் மற்றும் 17,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் எதிஹாட் ஏவியேஷன் குழுமமான EAG உடன் கூட்டு சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறியபடி பத்து வருட காத்திருப்பிற்குப் பிறகு வரவிருக்கும் அபுதாபி மிட்ஃபீல்ட் டெர்மினலின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!