அமீரக செய்திகள்

இரண்டு இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் தலா 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை..

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனரின் சமீபத்தில் நடத்தப்பட்ட டிராவில் இரண்டு இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த டிராவின் சீரிஸ் 414 மற்றும் சீரிஸ் 415 ஆகிய இரண்டிலுமே பங்கேற்ற இரண்டு இந்தியர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் $1 மில்லியன் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் வசிக்கும் 40 வயதான இந்தியரான மென்னா சஜு என்பவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி டிக்கெட்டை வாங்கி மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 414 இல் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார்.

வெளியான செய்திகளின்படி, அமீரகத்தில் பிறந்து வளர்ந்த சஜுவும் அவரது நண்பர்களும் ஐந்து வருடங்களாக துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமொஷனில் பங்கேற்று வந்ததாகவும், ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் போதெல்லாம் ஒவ்வொரு சீரிஸுக்கும் டிக்கெட்டில் பெயரை மாற்றிக் கொள்வதும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் மற்றொரு வெற்றியாளர் கேரளாவைச் சேர்ந்த 37 வயதான இந்தியரான பிரசாந்த் கேத்தன்குழி என்பவர், மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 415 இல் $1 மில்லியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கொச்சி நகரத்திற்கு பயணிக்கும் போது அவர் ஜனவரி 30 அன்று அந்த டிக்கெட்டை (4741) வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இருவரும் துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் சீரிஸ் தொடங்கியதிலிருந்து $1 மில்லியன் வென்ற இந்தியர்களில் சஜு மற்றும் கேத்தான்குழி முறையே 205வது மற்றும் 206வது இந்திய குடிமக்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்திய நாட்டினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் சீரிஸ் 413 இல் $1 மில்லியன் வென்ற முந்தைய வெற்றியாளரான தஜிகிஸ்தானைச் சேர்ந்த அப்துவாலி அக்மத் அலி என்பவருக்கு அவருக்குரிய 1 மில்லியன் டாலர் காசோலையானது துபாய் டூட்டி ஃப்ரீ அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, துபாயில் உள்ள மதர் லைன்ஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் இயக்குநராகவும் பகுதி உரிமையாளராகவும் பணிபுரியும் இந்தியரான திரு. ஜான் குரியன் ஜான் என்பவர் ஜனவரி 20 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் (Finest Surprise) சீரிஸ் 1830 இன் டிக்கெட் எண் 1354 உடன் BMW X6 M50i காரை வென்றுள்ளார். இவர் துபாய் டூட்டி ஃப்ரீயில் வெற்றி பெறுவது இது முதல் முறையல்ல. ஏனெனில் அவர் ஏற்கெனவே Audi R8 RWS V10 Coupe காரை துபாய் டூட்டி ஃப்ரீயின் இதே பிரிவில் டிக்கெட்டை வாங்கி வென்றிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமோஷன்களில் தொடர்ந்து பங்கேற்பவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வரிசையில் கடைசியாக, துபாயில் வசிக்கும் 52 வயதான ஜோர்டானிய நாட்டவரான சலே அல் ஷாவா என்பவர் ஜனவரி 30 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 531 இன் டிக்கெட் எண் 0928 உடன் BMW R 9T வென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீயின் ப்ரோமொஷனில் பங்கேற்கும் அல் ஷாவா தற்போது, மூன்று முறை வெற்றி பெற்று பரிசுகளை வென்றவராக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!