ADVERTISEMENT

துபாய்: குப்பை தொட்டியில் கிடந்த 8.15 இலட்சம் திர்ஹம்ஸ் பணம்.. ஆட்டைய போட்ட இருவரை ஜெயிலில் போட்ட போலீஸ்..

Published: 10 Feb 2023, 2:27 PM |
Updated: 10 Feb 2023, 2:28 PM |
Posted By: Menaka

துபாயில் ஒரு வில்லாவின் (Villa) குப்பைத் தொட்டியில் இருந்து சுமார் 815,000 திர்ஹம்களை திருடிய இரண்டு பராமரிப்புப் பணியாளர்களுக்கு (Maintenance worker) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி, அரேபிய பெண் ஒருவர், தனது வில்லாவின் மொட்டை மாடியில் சிறிய குப்பைத் தொட்டியில் தனது பணத்தை மறைத்து வைத்து விட்டு, விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, குப்பைத்தொட்டியில் தான் மறைத்து வைத்திருந்த பணத்தை காணவில்லை என்றவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பணம் திருடப்பட்டிருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன் பிறகு, பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், புலனாய்வு குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஏசி பராமரிப்பிற்காக (AC maintenance) வந்த இரண்டு நபர்களால் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குப்பைத் தொட்டியில் 815,000 திர்ஹம்களைக் கண்டுபிடித்த குற்றவாளிகள், பணத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

குற்றவாளிகளில் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது குடும்பத்திற்கு 345,000 திர்ஹம் அனுப்பியதாகவும், மற்றொருவர் தனது சொந்த நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கு 322,000 திர்ஹம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல்நிலை நீதிமன்றம் பராமரிப்பு பணியாளர்களை குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் அதைத் தொடர்ந்து அவர்களை நாடுகடத்தவும் ஆணையிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு 165,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT