ADVERTISEMENT

UAE: இரவில் குளிர்காய சார்கோலை எரித்த பணிப்பெண்கள் இருவர் மரணம்.. குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை..

Published: 2 Feb 2023, 5:06 PM |
Updated: 2 Feb 2023, 6:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்பாரதவிதமாக கார்பன் மோனாக்சைடை சுவாசிப்பதன் மூலமாக ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு துபாய் காவல்துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது. வெளியாகியுள்ள செய்தியின்படி, அறையை சூடாக்குவதற்கு இரவு முழுவதும் சார்கோலை (charcoal) எரித்த பணிப்பெண்கள் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறையின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் காவல்துறை இது குறித்து தெரிவிக்கையில் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. இதே போல் கடந்த 2020ம் ஆண்டில் அறையில் குளிரை போக்க இரவு முழுவதும் தொடர்ச்சியாக சார்கோலை எரித்ததன் காரணமாக வெளியான நச்சு வாயுவால் ஆசியாவைச் சேர்ந்த இரண்டு பணிப்பெண்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கார்பன் மோனாக்சைடு வாயுவானது அடுப்புகள், நெருப்பிடம் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகள் போன்ற சாதனங்களில் எரிபொருளை எரிப்பதன் மூலம் உருவாகலாம். ஆகவே,  காற்றோட்டம் இல்லாத மூடிய அறையில் உள்ளவர்கள் CO வை சுவாசிக்கும்போது, அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறுதியில் இறந்து விடுவார்கள் என்று பாதுகாப்பு விழிப்புணர்வுத் துறையின் இயக்குநர் புட்டி அஹ்மத் பின் தர்விஷ் அல் ஃபலாசி அவர்கள் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் CO வாயுவானது நிறமற்ற, மணமற்ற மற்றும் சுவையற்ற பண்புகளைப் பெற்றிருப்பதால், அவை ‘silent killer’ என்று அழைக்கப்படுவதாக சிறப்பு தடயவியல் சான்றுகள் துறையின் இயக்குநர் இப்திசம் அப்துல் ரஹ்மான் அல் அப்தூலி அவர்கள் கூறியுள்ளார்.

யாரேனும் CO வாயுவினை சுவாசித்து இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், உடனடியாக அவர்களை காற்றோட்டமான பகுதிக்கு அழைத்துச் சென்று பின் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் பெட்ரோல், இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி மற்றும் மரம் போன்ற கார்பன் கொண்ட எரிபொருளை எரிக்கும்போது அவற்றிலுள்ள கார்பன் முழுமையாக எரியாமல் இருந்தால் CO என்ற நச்சு வாயு உற்பத்தியாவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

ஆகையால், முற்றிலும் மூடப்பட்ட காற்றோட்டமில்லாத இடங்களில் தீயை உண்டாக்கக் கூடிய உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், நச்சு வாயுக்களைக் கண்டறியும் கருவிகளை பொருத்தவும் அல் ஃபலாசி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.