ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து அஜ்மான் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, எரிபொருள் விலை உயர்வினால் டாக்ஸி கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு 1.78 திர்ஹம்கள் வசூலிக்கட்டுள்ள நிலையில் தற்போது, பிப்ரவரி மாதத்திற்கு 5 ஃபில்ஸ் அதிகரிக்கப்பட்டு ஒரு கிலோமீட்டருக்கு 1.83 திர்ஹம்கள் வசூல் செய்யப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதத்தில் மட்டும் எரிபொருளின் விலை 27 ஃபில்ஸ் வரை உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 2015 இல் ஐக்கிய அரபு அமீரகம் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதாக அறிவித்ததில் இருந்து, UAE இன் எரிபொருள் விலைக் குழு ஒவ்வொரு மாத இறுதியிலும் உள்ளூர் சில்லறை எரிபொருள் விலைகளில் மாற்றங்களை செய்து வந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வின்படி, Super 98 பெட்ரோலின் விலையானது லிட்டருக்கு 0.27 திர்ஹம்கள் அல்லது 9.7 சதவீதம் அதிகரித்து 3.05 திர்ஹம்கள் ஆக உள்ளது. மேலும், Special 95-யின் விலை லிட்டருக்கு 0.26 திர்ஹம்கள் அல்லது 9.7 சதவீதம் அதிகரித்து 2.93 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இ-பிளஸ் விலை லிட்டருக்கு 0.27 திர்ஹம்கள் அல்லது 10.4 சதவீதம் உயர்த்தப்பட்டு 2.86 திர்ஹம்களுக்கு விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் உலகளாவிய எரிபொருள் விலைகளுடன் ஒப்பிடும் போது, அமீரகத்தில் எரிபொருள் விலைகள் கணிசமாக மலிவானவை என்று கூறப்பட்டுள்ளன.