அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஐடி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் செய்தி.. மறுப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்த ICP..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான (Identity, Citizenship, Customs and Ports Security – ICP) ஃபெடரல் ஆணையம், சமீபத்தில் எமிரேட்ஸ் ஐடி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிவந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்ததுடன், இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடியை பெற வளைகுடா நாட்டை சேர்ந்த குடிமக்கள் எந்தவித வழிமுறைகளும் பின்பற்றாமல் வெறும் கட்டணம் மட்டும் செலுத்தி எமிரேட்ஸ் ஐடியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைத்தளங்களில் ஒருசில நபர்களால் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தி நாடு முழுவதும் வைரலாகியுள்ள நிலையில், இதற்கு ஆணையம் மறுப்பு தெரிவித்ததுடன், அந்த சமூக ஊடக பதிவின் மங்கலான படங்களையும் பகிர்ந்துள்ளது.

மேலும், ICP வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது போலியான செய்தி என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடி கார்டைப் பெறுவதற்கு அரசு வகுத்துள்ள மக்கள்தொகைப் பதிவேடு தேவைகளை அனைவரும் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுளளது.

ஆகையால், எமிரேட்ஸ் ஐடியைப் பெறுவது, அது தொடர்பான ஒழுங்குமுறை முடிவுகளின்படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் மேலும், அவற்றில் எந்த மாற்றங்களும் கிடையாது என்றும் ICP தெரிவித்துள்ளது.

எனவே, குடியிருப்பாளர்கள் மேற்கூறிய வதந்திகளை புறக்கணிக்குமாறும், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களில் இருந்து சரியான தகவலை அறிந்து கொள்ளுமாறும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற போலியான செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் குடியிருப்பாளர்கள் யாரும் அதனை மற்றவருக்கு பகிர வேண்டாம் என்றும் ICP கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!