அமீரக செய்திகள்

மூன்று மாதங்களாக தேடப்பட்ட இந்திய இளைஞர் துபாயில் மரணம்! காணாமல் போன நிலையில் சடலமாக மீட்பு..

துபாயில் பணிபுரிந்து வந்த 29 வயதான இந்திய நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாயில் விற்பனையாளராக பணியாற்றி வந்த, கேரளாவை பூர்விகமாக கொண்ட அமல் சதீஷ் என்ற நபர், கடந்த ஆண்டு அக்டோபர் 20, 2022 அன்று அல் வார்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள இன்டர்நெஷனல் சிட்டியில் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் அமல் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரின் தீவிர முயற்சியில் இறுதியாக பிப்ரவரி 15, 2023 அன்று அவரது உடல் ரஷீதியாவில் மணல் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூக ஆர்வலரான நசீர் வடனப்பள்ளி என்பவரின் கூற்றுப்படி, ஒரு நகராட்சி துப்புரவு பணியாளர் சதீஷின் சடலத்தைக் கண்டுபிடித்து காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சதீஷின் உடலை அவரது குடும்பத்தினரின் சார்பில் வடனப்பள்ளி பெற்றுக்கொள்ள துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் ஒப்புதல் அளித்துள்ளது. .

மேலும், வழக்கமான சட்ட முறைகள் முடிக்கப்பட்ட பிறகு இறந்து போன சதீஷின் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து சதீஷின் சடல் கடந்த புதன்கிழமையன்று அவரது சொந்த ஊரான கேரளாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வடனப்பள்ளி தெரிவித்துள்ளார். காணாமல் தேடப்பட்ட நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த வழக்கானது மேல் விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!