அமீரக செய்திகள்

UAE : வேலைக்கான விண்ணப்பங்களில் 90% விண்ணப்பங்கள் முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படுகின்றன..!! ஏன் தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 90 சதவீதம் வரையிலான விண்ணப்பங்கள் முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல் பல காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் பணியமர்த்தல் மேலாளரைக் கூட (Hiring manager) சென்றடையாமல் இருப்பதாகவும் அமீரகத்தின் பிரபல ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் விண்ணப்பதாரர்களின் CV-க்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில், ஒவ்வொரு நாளும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைப் பிரித்தெடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், CV-க்கள் சரியாக வடிவமைக்கப்படாமல் இருந்தாலும், மின்னஞ்சல் சரியான முகவரிக்கு அனுப்பப்படாவிட்டால், அவை நீங்கள் விண்ணப்பிக்கும் பொறுப்புக்கு சென்றடையாமல் போகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அமீரகத்தில் இருக்கக்கூடிய ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசகர்கள் (Recruitment and HR consultants) தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிழக்கு ஐரோப்பா மற்றும் MENA-வின் விற்பனைத் துணைத் தலைவரும், அடெக்கோ மத்திய கிழக்கு நாடுகளின் (Adecco Middle East) தலைவருமான மயங்க் படேல் அவர்கள் பேசுகையில், “ஒரு நிறுவனத்தின் பணியமர்த்தல் மேலாளர் ஒரு நாளைக்கு தோராயமாக 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெறும் நிலையில், AI ஸ்கிரீனிங் செயல்முறையின் மூலம், பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை விண்ணப்பங்கள் மட்டுமே அடுத்த கட்ட சுற்றுக்கு அனுப்பப்படுகின்றனர். எனவே, ஸ்கிரீனிங் செயல்முறையானது நேரத்தைக் குறைக்க உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Upfront HR இன் நிர்வாக இயக்குநரான வலீத் அன்வர் அவர்கள், ஒவ்வொரு நிறுவனத்திலும் வேலைக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவியும் நிலையில், தனிநபராக ஒவ்வொரு விண்ணப்பத்தையும் மதிப்பாய்வு செய்வது கடினம் என்று தெரிவித்துள்ளார். மேலும், வந்து சேரும் விண்ணப்பங்களில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே வேலைக்கு ஏற்ப பொருத்தமானதாக உள்ளன, மீதமுள்ளவை வேலைக்கு ஏற்ற தகுதிகளுடன் இல்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், இப்போது வேலைகளுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது என்றும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தல் மேலாளர் அல்லது பணியமர்த்துபவர் யார் என்பதைக் கண்டறிந்து, கிளிக் செய்து விண்ணப்பிப்பதற்குப் பதிலாக விண்ணப்பத்தை நேரடியாக அவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பதாரர்கள் வேலை விளம்பரத்தை சரியாக படிக்காமல், தேவையான தகுதிகளுடன் பொருந்தாமல் விண்ணப்பிப்பது பணியமர்த்துபவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைகிறது என்று அன்வர் கூறியுள்ளார்.

எனவே, விண்ணப்பதாரர்கள் வேலை விளம்பரத்தை தெளிவாகப் படித்து, குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவிகிதம் பதவிக்கான தகுதிகளுடன் இருப்பதை உறுதி செய்துகொண்டு பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகையால், விண்ணப்பதாரர்கள், மெய்நிகர் நேர்காணல்கள், AI மற்றும் ஆட்டோமேஷன் பயன்பாடு, ரிமோட் பணியமர்த்தல் மற்றும் பணிபுரிதல், திறமை பன்முகத்தன்மை, வீடியோ நேர்காணல்கள் போன்ற பணியமர்த்தல் வழிமுறைகளைக் கருத்தில்கொண்டு அதற்கேற்றவாறு விண்ணப்பங்களை தயார் செய்வது முக்கியம் என்றும் மயங்க் படேல் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!