ADVERTISEMENT

அமீரகம்-ஓமான் இடையேயான பயணம் வெறும் 47 நிமிடங்களாக குறையும்.. புதிய ரயில்வே ஒப்பந்தம் கையெழுத்து…!!

Published: 22 Feb 2023, 6:21 PM |
Updated: 22 Feb 2023, 6:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் 303 கிமீ ரயில்வே நெட்வொர்க்கின் வளர்ச்சிக்கு ஆதரவாக, அபுதாபியில் உள்ள முபதாலா இன்வெஸ்ட்மென்ட் (Mubadala Investment) நிறுவனத்துடன், UAE – ஓமான் ரயில் நெட்வொர்க்கின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான ஓமான் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனம் (Oman and Etihad Rail Company) $3 பில்லியன் மதிப்புள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒத்துழைப்பின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டிருக்கும் பயணிகள் ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்றும், இதனால் ஓமானின் சோஹரில் இருந்து அபுதாபிக்கு செல்லும் பயண நேரத்தை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களாகவும், சோஹரில் இருந்து அல் அய்னுக்கான பயண நேரத்தை 47 நிமிடங்களாகவும் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், சரக்கு ரயில்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபதாலாவுடனான கூட்டாண்மை ரயில்வே துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், ஐக்கிய அரபு அமீரகம் – ஓமான் ரயில் நெட்வொர்க்கின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்துவதில் ஓமன் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்புகளின் முயற்சிகளுக்கு ஏற்ப வருகிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஓமான் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அஹ்மத் அல் முசாவா அல் ஹஷேமி மற்றும் அமீரக தொழில்துறை பிரிவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பகீத் சயீத் அல் கதீரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதேவேளை, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், ஓமான் மற்றும் எதிஹாட் ரயில் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களுடன் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சரும், ஓமான் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனத்தின் தலைவருமான சுஹைல் பின் முகமது ஃபராஜ் ஃபாரிஸ் அல் மஸ்ரூயி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சுஹைல் பின் முகமது ஃபராஜ் ஃபாரிஸ் அல் மஸ்ரூயி அவர்கள் கூறுகையில், ஓமான்-எதிஹாட் ரயில் நெட்வொர்க்கை நிறுவுவது, அமீரகம் மற்றும் ஓமான் இடையேயான மூலோபாய உறவுகள் மற்றும் வலுவான வரலாற்று உறவுகளின் விரிவாக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரயில்வே நெட்வொர்க் மூலம் பொருளாதார, தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்பு மையங்களை இணைகும் கூட்டு முயற்சியானது சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதேசமயம், இந்த ஒப்பந்தம் அமீரகம் மற்றும் ஓமானில் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், விநியோகத் திறனை மேம்படுத்துவதற்கும், புதிய எல்லை தாண்டிய வர்த்தக வாய்ப்புகளைத் திறப்பதற்கும், பயணிகள் மற்றும் பொருட்களுக்கு ரயில் வழியாக பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து வழிகளை வழங்குவதற்கும் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல, Oman மற்றும் Etihad Rail Company உடனான மூலோபாய கூட்டாண்மையானது பொருளாதார மேம்பாடு மற்றும் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமீரகத்தின் இன்டஸ்ட்ரீஸ் பிரிவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பகீத் அல் கதீரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவர்களை அடுத்து, இந்த ரயில் நெட்வொர்க் இணைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஓமான் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் முசாவா அல் ஹஷேமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வாய்ப்புகள்:

அமீரக அதிபர் மாண்குமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஓமான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களுக்கு இடையே கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்த ரயில் நெட்வொர்க் மூலம் விநியோகச் சங்கிலிகளின் ஒட்டுமொத்த செலவு குறைக்கப்படும் என்றும் இந்த நெட்வொர்க் தனியார் துறைக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிய மற்றும் மாறுபட்ட வேலை வாய்ப்புகளை வழங்குதல், தேசிய மனித வளங்களை பயிற்றுவித்தல், சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துதல், உலக வர்த்தகத்தில் இரு நாடுகளின் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.