அமீரக செய்திகள்

UAE: தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் வழங்கப்படும் 9 வகையான விடுமுறைகள்… எதற்கெல்லாம் தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பல்வேறு வகையான விடுப்புகளை அமீரக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊழியர்கள், பெற்றோர்கள் பயனடையும் வகையில் புதிதாக பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்வது, ஹஜ் யாத்திரைக்கான விடுமுறை, விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட ஒன்பது வகையான விடுமுறைகளை அமீரகத்தில் வசிப்பவர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவற்றுடன் பெற்றோர் விடுப்பு, வருடாந்திர விடுப்பு மற்றும் சம்பளம் இல்லாத விடுப்பு ஆகியவை ஆலோசனைக்குப் பின்னர் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் விடுப்பு (Student leave)

ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒரு ஊழியர், தேர்வு எழுதுவதற்காக வேண்டி ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுப்புக்கு விண்ணப்பிக்க ஊழியர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியில் உள்ளவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவிற்கு விடுப்பு (Sick leave)

இதன்படி, பணியாளர்கள் சுமார் 90 நாட்கள் வரை உடல்நலக்குறைவால் விடுப்பு எடுக்கலாம். இதற்கு ஊழியர் முறையான மருத்துவ அறிக்கையுடன் (Medical Report) முதலாளியிடம் மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும், அதேவேளை இது தொடர்ச்சியாகவோ அல்லது விட்டு விட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர் 15 நாட்களுக்கு முழு ஊதியமும், அடுத்த 30 நாட்களுக்கு அரை ஊதியமும், 45 நாட்களுக்கு ஊதியம் இல்லாமலும் விடுப்பில் இருக்க முடியும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், நோய்வாய்ப்பட்ட விடுப்பின் போது முதலாளி ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்ய முடியாது. மேலும், போதைப்பொருள் நுகர்வு, போக்குவரத்து விதி மீறல் மற்றும் பணியாளர் பாதுகாப்பு விதிகளை மீறியதால் ஏற்படும் நோய்க்கு பணியாளர் விடுப்பு எடுக்க முடியாது.

வருடாந்திர விடுப்பு (annual leave):

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளிநாட்டினர் என்பதால், அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதால் அவர்களுக்கு வருடாந்திர விடுப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த விடுப்பினைப் பெற நிறுவனத்தில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு 30 நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெறலாம், எனினும் ஆறு மாதங்கள் முடிந்திருந்தால் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோலவே, பகுதி நேர பணியாளர்களும், முதலாளியுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வருடாந்திர விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

பெற்றோர் விடுப்பு (Parental leave):

இந்த முறையானது தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் தனது குழந்தை பிறந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், ஐந்து வேலை நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அத்துடன் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடையும் வரை எப்போது வேண்டுமானாலும் விடுமுறையைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு (maternity leave):

பெண் தொழிலாளர்கள் மகப்பேறுக்காக மொத்தமாக 60 நாள் விடுமுறையைப் பெறலாம். அதில் 45 நாட்கள் முழு ஊதியத்துடனும் 15 நாட்கள் அரை ஊதியத்துடனும் வழங்கப்படும். குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஊனத்தால் பாதிக்கப்பட்டாலோ கூடுதலாக 30 நாள் ஊதியத்துடன் விடுப்பு எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த விடுப்பு மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப் படலாம், ஆனால், ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்கப்படும்.

மரணம் அல்லது கருணை விடுப்பு (Compassionate or bereavement leave)

ஒரு ஊழியரின் வாழ்க்கைத் துணை இறந்தால் ஐந்து நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கும், பெற்றோர், குழந்தை, உடன்பிறந்தவர்கள், பேரக்குழந்தைகள் அல்லது தாத்தா பாட்டியின் இறப்புக்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது, இறப்புக்கான ஆதாரத்தை ஊழியர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ விடுமுறைகள் (official holiday):

தனியார் துறை ஊழியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்புப் பெற உரிமை உண்டு என்று அமீரக தொழிலாளர் சட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் புத்தாண்டு, ஈத் அல் ஃபித்ர், ஈத் அல் அதா இது போன்ற பொது விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

ஹஜ்/உம்ரா விடுப்பு:

இஸ்லாமியர்கள் மக்காவிற்கு ஹஜ் எனும  புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக வேண்டி சிறப்பு விடுமுறையை ஊழியர் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 30 நாட்களுக்கு மேல் இந்த விடுமுறையை வழங்க முடியாது. நிறுவனத்தில் பணிபுரியும் காலத்தில் ஒருமுறை மட்டுமே இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமீரக தொழிலாளர் சட்டத்தில் பணியாளருக்கு உம்ரா விடுப்பை வழங்குவதற்கான எந்த விதிகளும் இல்லை. இந்த விடுப்பை கருத்தில் கொள்வது முதலாளியின் பொறுப்பாகும்.

சேவை செய்வதற்கான விடுப்பு (Sabbatical leave):

அமீரகத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, அமீரக மக்கள் தேசிய மற்றும் ரிசர்வ் சேவையை (national and reserve service) செய்ய விடுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இது அமீரக குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!