வளைகுடா செய்திகள்

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: FIFA உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட 10,000 கேரவன்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் கத்தார்..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட கத்தார் முன்வந்துள்ளது. சமீபத்தில் கத்தாரில் கோலாகலமாக நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, பயன்படுத்தப்பட்ட 10,000 கேபின்கள் மற்றும் கேரவன்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது. இந்த கேபின்கள் அனைத்தும் நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கிக்கு கேரவன்களை சுமந்து செல்லும் முதல் கப்பலானது, தோஹா துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை (இன்று) புறப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் நாள்களில் தொடர்ந்து கேரவன்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துருக்கியைப் பார்வையிடச் சென்றிருந்த முதல் வெளிநாட்டுத் தலைவர் கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி ஆவார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு நன்கொடையாக 50 மில்லியன் கத்தார் ரியாலும் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் துருக்கியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, இஸ்தான்புல்லில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் “இந்த பேரழிவைத் தணிக்க (mitigate this disaster)” தோஹா உதவும் வழிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்வீட் செய்துள்ளார்.

தற்போது, நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமான நிலையில், இன்னும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கு முன் பெரிய பழுதுபார்ப்பு பணிகள் தேவைப்படுவதால், துருக்கியில் பெரும்பாலான மக்கள் வீட்டு வசதியின்றி சிரமப்படும் நிலையில் கத்தார் வழங்கும் ஆதரவு முக்கியப் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!