ADVERTISEMENT

அமீரகத்திலேயே முதல்முறையாக வெறும் ஐந்தே நிமிடங்களில் பிசினஸ் லைசன்ஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்திய ராஸ் அல் கைமா… எவ்வாறு பெறுவது?

Published: 10 Feb 2023, 11:56 AM |
Updated: 11 Feb 2023, 9:21 AM |
Posted By: Menaka

ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலமானது (Ras Al Khaimah Economic Zone – RAKEZ) தொழில்முனைவோர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ராஸ் அல் கைமாவில் உள்ள தொழில்முனைவோர் தங்கள் பிசினஸ் லைசன்ஸ்களை ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்த உடனடி லைசன்ஸ் (instant licence) முறை மூலம் தொழில்முனைவோர் வணிகங்களை தொடங்குவதை விரைவுபடுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RAKEZ கூறுகையில், தொழிலைத் தொடங்க நினைக்கும் ஒருவர், அவருக்கான வணிக நடவடிக்கைகளைத் (business activities) தேர்வு செய்வது, பணம் செலுத்துவது மற்றும் உரிமத்தைப் பெறுவது போன்ற நடவடிக்கைகளுக்கு RAKEZ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இலவச மண்டல வணிகங்களுக்கு (free zone businesses) உடனடி லைசன்ஸ் வழங்கும் முதல் பொருளாதார மண்டலம் RAKEZ ஆகும். இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தே நிமிடங்களுக்குள் தங்கள் வணிகத்திற்கான முயற்சிகளைத் தொடங்கவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் உடனடி பிசினஸ் லைசன்ஸ்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாக RAKEZ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், RAKEZ-இன் வலைத்தளமானது ஒரு சில கிளிக்குகளில், முதலீட்டாளர்களுக்கு வணிகப் பெயரைத் தேர்வு செய்யவும், பங்குதாரர்களின் விவரங்களைச் சேர்க்கவும், வணிக நடவடிக்கைகள் மற்றும் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும், சரியான லைசன்ஸுடன் சட்டப்பூர்வமாக வணிகத்தை உடனடியாகத் தொடங்கவும் அனுமதிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், RAKEZ குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த எளிய மற்றும் விரைவான முறையானது உண்மையில் சாதாரணமானது கிடையாது என்று குழுமத்தின் CEO ராமி ஜல்லாட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்முனைவோர்களுக்கான பல்வேறு பேக்கேஜ் வகைகள் உள்ள நிலையில், அவர்கள் பல செயல்பாடுகள் மற்றும் விசாக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளுக்கு 5,499 திர்ஹம் முதல் வணிகப் பேக்கேஜ்களை தேர்வு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT