அமீரக செய்திகள்

துருக்கியில் மிகப்பெரிய கள மருத்துவமனை திறப்பு.!! நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ஆதரவு வழங்கும் அமீரகம்…!!

துருக்கி மற்றும் சிரியா நிலை எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியிருப்பாளர்கள் இடர்பாடுகளில் சிக்கி பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் காசியான்டெப்பில் (Gaziantep) எமிராட்டி நிவாரண கள மருத்துவமனையை (Emirati Relief Field Hospital) நிறுவியுள்ளது. தற்போது, அந்த மருத்துவமனையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க அதன் மனிதாபிமான பணியைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியின் உள்ளூர் மனிதாபிமான முயற்சிகளுக்கு பங்களிக்கும் வகையில், கள மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள மருத்துவமனையில் 50 படுக்கைகள் மற்றும் நான்கு ICU படுக்கைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இது துருக்கியின் முதல் ‘நிலை III (level-III)’ கள மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டு செயல்பாட்டுக் கட்டளையால் தொடங்கப்பட்ட ‘Gallant Knight / 2’ என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்ற மருத்துவமனையின் திறப்பு விழாவில் துருக்கிக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் சயீத் தானி அல் தாஹேரி அவர்கள் பல துருக்கிய அதிகாரிகளுடன் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் கள மருத்துவமனை நிறுவப்பட்டதாகவும், இது மனிதாபிமான அணுகுமுறையை உள்ளடக்கியது என்றும் அல் தாஹேரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைக் கண்டறிவதற்காக கள மருத்துவமனையின் பொறுப்பான எமிராட்டி குழு, துருக்கியில் உள்ள அதிகாரப்பூர்வ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளதாகவும் மேலும் அவர் மருத்துவ பணியாளர்களை வரிசைப்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் கள மருத்துவமனையின் குழுவிற்கு தேவையான ஆதரவை வழங்கியதற்காக துருக்கிய அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், எமிரேட்ஸ் நிவாரண கள மருத்துவமனையின் தளபதியான ஸ்டாஃப் பிரிகேடியர் (Staff Brigadier) டாக்டர் அப்துல்லா காதம் அல் கைதி அவர்கள் கூறுகையில், மருத்துவமனையில் வரவேற்பு (Reception), ஸ்க்ரீனிங், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, பல் மருத்துவம், எக்ஸ்ரே, ஆய்வகம், மருந்தகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் (Outpatient) உட்பட பல்வேறு துறைகள் இருப்பதாகவும், மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களில் உளவியலாளர்கள் (psychologists) இருப்பதால், அவர்கள் நாட்டை உலுக்கிய பேரிடரால் கவலை, மனச்சோர்வு மற்றும் மனஉளைச்சல் சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இந்த கள மருத்துவமனை முக்கியமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதாகக் கூறிய அவர், சர்வதேச வகைப்பாட்டின் படி கள மருத்துவமனையானது நிலை III கள மருத்துவமனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!