அமீரக செய்திகள்

UAE: வேலை இல்லாமலும், வேலை தேடியும் கஷ்டப்படும் நபர்களுக்கு மூன்று வேளை உணவு இலவசம்.! எட்டு ஆண்டுகளாக அசத்தி வரும் உணவகம்..!!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் எட்டு வருடங்களாக அமீரகத்தில் வேலையின்றி கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு ஷார்ஜாவில் உள்ள ஒரு உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். அமீரகம் முழுவதும் உள்ள இது போன்ற வேலையில்லாமால் கஷ்டப்படும் நபர்களுக்கும், வேலை தேடி வந்து பணத்திற்கு கஷ்டப்படுபவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வரும் பல உணவகங்களில் ஒன்றாக ஷார்ஜாவில் இருக்கும் கராச்சி ஸ்டார் உணவகமும் இருந்து வருகிறது.

எட்டு வருடங்களாக கஷ்டப்படுவோருக்கு இலவச உணவு அளிப்பதை சேவையாக செய்து வரும் கராச்சி ஸ்டார் உணவகத்தின் உரிமையாளரான ஷாஹித் அஸ்கர் பங்காஷ் இது பற்றி கூறுகையில், அமீரகத்தில் வேலையின்றி தவிப்பவர்கள், காலாவதியான விசா உடையவர்கள் மற்றும் விசிட் விசாவில் உள்ளவர்கள் அனைவரும் ஷார்ஜாவின் முவைலா மற்றும் சாஜாவில் உள்ள எங்கள் கிளைகளுக்கு வந்து இலவசமாக உணவை சாப்பிட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இந்தச் சேவை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அமீரகம் வந்து வேலை இழந்து, பணமின்றி தவிக்கும் மக்களை நாங்கள் பெருமளவில் காண்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இது போன்றவர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்து பணம் இல்லை என்பதை தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், அத்தகையவர்களுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் என எதுவும் எங்கள் உணவகத்தில் இல்லை என்றும், அந்த நாளில் உணவகத்தில் கிடைக்கும் எதையும் அவர்கள் ஆர்டர் செய்து சாப்பிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது போன்ற நபர்களுக்கு உணவக ஊழியர்களிடையே ஒரு குறியீட்டு வார்த்தையை அமைத்துள்ளதால், ஊழியர்களிடம் உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுமாறு ஷாஹித் அஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், உணவகத்தில் உள்ள வேறு யாருக்கும் இது தெரியாது மற்றும் இலவசமாக உண்பவர்களின் சுயமரியாதைக்கு தீங்கு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “வேலைக்காக அமீரகத்திற்கு வரும் மக்களில் சிலருக்கு வேலை கிடைப்பதில் அதிர்ஷ்டம் இல்லை, அதனால் வேலை கிடைக்கும் வரை அவர்கள் கடினமான காலங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, நாங்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை இலவசமாக உணவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவு வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மிகவும் கஷ்டப்படுபவர்கள் ஒரு மாதம் கூட உணவகத்திற்கு வந்து இலவசமாக உணவைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை என்றும்குறிப்பிட்ட ஷாஹித் அஸ்கர், சாஜா பகுதியில் கராச்சி ஸ்டார் உணவகத்தின் முதல் கிளையை திறக்கும் போது இந்த யோசனையை, மறைந்த அவரது மாமா வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோலவே, வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாகவும், ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகையிலும் உணவு வழங்கும் பல உணவகங்கள் அமீரகத்தின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!