வளைகுடா செய்திகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 வீடுகளைக் கட்டும் சவூதி… நன்கொடையளிக்க SR 361.8 மில்லியன் வரை சேகரித்துள்ளதாகத் தகவல்..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்துவிட்டு, இருப்பிடம், உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை இழந்து தவித்து வருகின்றனர். இயற்கைப் பேரிடரால் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயுள்ளன. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சவூதி அரேபியா முன்வந்துள்ளது. பேரழிவு ஏற்பட்ட உடனேயே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்த முதல் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும்.

அதன்படி, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சுமார் 3,000 தற்காலிக கட்டிடங்களை சவூதி அரேபியா கட்டும் என்று மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KS Relief) பொது மேற்பார்வையாளர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீயா அவர்கள் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் எல்லையில் பதிவான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

KSRelief ஆயிரக்கணக்கான கூடாரங்களை அனுப்பியுள்ளதாகக் கூறிய அல்-ரபீயா, எதிர்வரும் மாதங்களில் மக்களுக்கு போதுமான தங்குமிடம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்வதும், மருந்து, உணவு மற்றும் அவசர சுகாதாரம் போன்ற தேவையான ஆதரவை வழங்குவதும் சவுதி குழுவின் முன்னுரிமைகள் என்று ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளின்படி, சவுதி அரேபியா KSRrelief மற்றும் சவுதி ரெட் கிரசென்ட் ஆகியவற்றின் குழுக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் உதவ அனுப்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மில்லியன் கணக்கான நன்கொடைகளை இரு நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. அதேவேளை, சஹேம் இ-பிளாட்ஃபார்ம் பிரச்சாரத்தின் மூலம் இதுவரை சுமார் 361.8 மில்லியன் சவூதி ரியால்கள் வரை சேகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!