அமீரக செய்திகள்

UAE: ‘உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ – பள்ளி வாகனங்களில் கேமராக்கள்… அசத்தும் எமிரேட்..!!

ஷார்ஜா எமிரேட்டில் இருக்கக்கூடிய ஷார்ஜாவின் தனியார் கல்வி ஆணையத்தின் (Sharjah Private Education Authority – SPEA) ‘Your Children Are Safe’ என்ற முயற்சியின் இரண்டாம் கட்டமாக ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் 2,000 பேருந்துகளில் கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள், குழந்தைகள் பள்ளிக்கு பயணம் செய்யும் போது பெற்றோர்கள் கண்காணிக்க அனுமதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, பேருந்துகளில் ஜிபிஎஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்டதாகவும் இது கொரோனா தொற்றுநோய்க்கு முன் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், GPS கண்காணிப்பை (Tracking) அனுமதிக்க, அவை SPEA இன் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அறை மற்றும் எமிரேட்ஸ் டிரான்ஸ்போர்ட்டின் செயல்பாட்டு அறை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 3,250 பஸ் டிரைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் (Supervisor) பாதுகாப்பு பயிற்சியும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து SPEA வின் அரசாங்க தகவல் தொடர்புத் துறையின் செயல் இயக்குநர் தாரிக் அல் ஹம்மாடி அவர்கள் பேசுகையில், இந்த முயற்சியானது சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல, இந்த திட்டத்தின் இரண்டாவது பகுதியாக பேருந்துகளில் ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் டேப்லெட் சாதனம் வழங்கப்படும் என்றும் அவை கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக, பேருந்துகளைக் கண்காணிக்க கணினியில் தங்கள் குழந்தைகளைப் பதிவுசெய்த பெற்றோருக்கு ஸ்மார்ட் அப்ளிகேஷன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சுமார் 2,000 பேருந்துகள் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய பேருந்து கண்காணிப்பாளர்களுக்கு 2,000 டேப்லேட் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,250 பேருந்து கண்காணிப்பாளர்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் பேருந்தில் ஏறுவது முதல் திரும்பி வீட்டிற்கு வந்திறங்குவது வரை பெற்றோர்களால் கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஷார்ஜா எமிரேட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் அனைத்து பள்ளி பேருந்துகளையும் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யும் பணி நடந்து வருவதாக அல் ஹம்மாடி தெரிவித்துள்ளார். அத்துடன், எமிரேட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எமிரேட்டில் உள்ள தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்களை நிறுவுவதற்கு ஒரு சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!