அமீரக செய்திகள்

UAE: முக்கிய சாலை மற்றும் ஐலேண்ட்களை இணைக்கும் புதிய அதிவேக நெடுஞ்சாலை..!! ஒரு மணி நேரத்திற்கு 6,000 பயணங்களுக்கு இடமளிக்குமாம்..!!

அபுதாபியில் புதிதாக மூன்று பகுதிகளை இணைக்கும் 11 கிமீ தொலைவுள்ள நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது. இது அல் ரீம் ஐலேண்ட், உம் யிஃபீனா ஐலேண்ட் (Umm Yifeenah Island) மற்றும் ஷேக் சயீத் பின் சுல்தான் ஸ்ட்ரீட் போன்றவற்றை இணைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உம் யிஃபீனா பாலத்தை அபுதாபி நிர்வாக சபையின் உறுப்பினரும், அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவருமான ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

அத்துடன் இந்த சாலையானது இரண்டு ஐலேண்டுகளுக்கும், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஷேக் சயீத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டுக்கும் (பொதுவாக சலாம் ஸ்ட்ரீட் என கூறப்படும்) இடையேயான டிரான்ஸ்-சிட்டி இணைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டும் பாதைகள் போன்ற சமூக உறுப்பினர்கள் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து அல்தார் (Aldar) நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆறுவழி நெடுஞ்சாலை, ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 6,000 பயணங்களுக்கு இடமளிக்கும் வசதி கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் தலைவர் முகமது அலி அல் ஷோராஃபா அவர்கள் இது குறித்து கூறுகையில், அமீரகத்தின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் சிறந்த அனுபவத்தை உறதிசெய்யக்கூடிய இந்த மைல்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தற்போது வடிவமைப்புப் பணியில் உள்ள “மிட்ஐலேண்ட் பார்க்வே (mid-island parkway)” திட்டத்தின் முதல் கட்டமாக இந்த பாலம் உள்ளது. இது அல் ரீம் ஐலேண்ட் மற்றும் சாதியத் ஐலேண்ட், அல் ரஹா பீச் மற்றும் கலீஃபா சிட்டியை இணைக்கும். மேலும் சைக்கிள் டிராக்குகள், நடைபாதைகள் அடங்கிய திட்டத்தினை 2028 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பசுமையான சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீரோட்டத்தை உறுதிப்படுத்தவும் மற்றும் சதுப்புநில ஈரநிலங்களில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கவும் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கூறுகள் மற்றும் வளைவு வடிவ காஸ்வேகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு மதிப்புச் சேர்க்கும் வகையில் திட்டத்திற்கு தேவையான 85 சதவீத பொருட்களை நிறுவனம் உள்நாட்டிலேயே வாங்கியுள்ளது.

மேலும், Aldar நிறுவனம் நகர்ப்புற திட்டமிடல் முயற்சிகளை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், எமிரேட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பொதுத்துறையில் அதன் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அல்தார் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தலால் அல் தியேபி கூறியுள்ளார். அதுபோல, இந்த முக்கியமான திட்டத்தை வழங்குவதில் நிறுவனம் ஆற்றிய பங்கைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!