அமீரக செய்திகள்

கற்பனைகளை சாத்தியமாக்கும் துபாய்.. உணவு டெலிவரிக்கு 3 ரோபோட்களை களமிறக்கிய RTA..

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தானியங்கு உணவு விநியோக ரோபோக்களை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் ‘Talabots’ என்றழைக்கப்படும் இந்த ரோபோட்கள் துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் (Dubai Silicon Oasis – DSO) துபாய் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையம் (Dubai Integrated Economic Zones Authority – DIEZA) மற்றும் Talabat UAE உடன் இணைந்து சோதனை முறையில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, DSO இன் மையத்தில் உள்ள Cedre Villas குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வதற்காக மூன்று தாலபோட்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 நிமிடங்களில் விரைவாக டெலிவரி செய்வதை உறுதி செய்வதற்காக, Cedre ஷாப்பிங் சென்டரிலிருந்து 3-கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இந்த தாலபோட்கள் பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த நவீன ரோபோக்கள், உணவு டெலிவரிக்கான செயல்திறனை மேம்படுத்தவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், குறுகிய தூர டெலிவரிகளை கவனித்து ரைடர்களை ஆதரிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த தாலபோட்களில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் முகத்தை அடையாளம் காணும் அம்சம், முகங்களை மங்கலாக்குவதன் மூலம் அடையாளம் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அது செல்லும் பாதையில் உள்ள தடைகளைக் கண்டறிந்து, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்:

ரோபோக்கள் அருகிலுள்ள உணவகத்திலிருந்து ஆர்டர்களை பெற்றுக் கொண்டு Cedre வில்லாஸின் குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்று வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலைச் சென்றடையும். தாலபாட்டின் பயன்பாட்டு இடைமுகம் (User Interface) முழுமையாக ஒருங்கினைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ரோபோவின் பயணத்தைக் கண்காணிக்க முடியும் மற்றும் அது அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தடைந்ததும் ஆப் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அதில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஆர்டர் செய்த உணவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Talabat UAE இன் நிர்வாக இயக்குனர், ரோபோட்களை ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டியின் எதிர்காலத்தை நோக்கிய நினைவுச்சின்னம் என்று கூறியுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் தடையற்ற டெலிவரி அனுபவங்களை வழங்குவதற்காக தாலாபோட்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த வெற்றியை தனித்துவமான கூட்டாளர்கள் மற்றும் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், RTA மற்றும் DIEZA டிஜிட்டல் மாற்றத்தின் அடுத்த அத்தியாயத்தை எளிதாக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து RTA பொது போக்குவரத்து முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் பஹ்ரோசியன் அவர்கள் கூறுகையில், RTA உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து தனியார் துறையுடன் தனது பங்களிப்பை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

DIEZA இன் இன்ஜினியரிங் மற்றும் ஸ்மார்ட் சிட்டியின் தலைமை அதிகாரி கூறுகையில் “ரோபோட்டின் தேவை துபாயில் அதிகரித்து வருவதால், RTA மற்றும் Talabat உடன் இணைந்து தானியங்கு டெலிவரி மற்றும் துறை சார்ந்த சேவைகளுக்கு புதுமையான, பாதுகாப்பான மற்றும் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!