அமீரக செய்திகள்

வெளிநாட்டவர்கள் ‘UAE மெடிக்கல் விசா’ பெற வழிமுறைகள் என்ன.? விசா கட்டணம், ஆவணங்கள் பற்றிய தகவல்கள்..!!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருத்துவ சுற்றுலா சங்கத்தின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் மருத்துவ சுற்றுலாவிற்காக அதிக வெளிநாட்டவர்களை ஈர்த்த மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக துபாய் ஹெல்த் அத்தாரிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 600,000 சர்வதேச நோயாளிகள் துபாயில் சிகிச்சைக்கு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவ உலகில் அதி நவீன தொழில்நுட்பமும், தலை சிறந்த மருத்துவமனைகளையும் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டு வருகிறது. அவ்வாறு அமீரகம் வந்து மருத்துவம் பார்க்க விரும்பும் வெளிநாட்டு நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவ, மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிப்பதை அமீரக அரசும் எளிதாக்கியுள்ளது.

அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான u.ae -யின் படி, அரசு அல்லது தனியார் மருத்துவமனையின் கீழ் சிகிச்சைக்காக வெளிநாட்டு நோயாளிகள் அமீரகத்திற்கு வந்திறங்கலாம். அத்துடன், வெளிநாட்டிலிருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளியின் வேண்டுகோளின் பேரில், அவருக்கான மருத்துவ சிகிச்சை நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பது மருத்துவ நிறுவனத்தின் பொறுப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு நோயாளி துபாயில் மருத்துவ சிகிச்சையை நாடினால், அவர்கள் துபாய் மற்றும் வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்திலிருந்து (General Directorate of Residency and Foreigners Affairs Dubai – GDRFA) ‘Medical Entry Permit’க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எந்த வகையான விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, விசாவிற்கான கட்டணமானது 85 திர்ஹம் முதல் 100 திர்ஹம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை நுழைவு அனுமதி இரண்டு வகைகளாக வழங்கப்படுகின்றன.
1. ஒற்றை நுழைவு (Single Entry)
2. பல நுழைவு (Multiple Entry)

சிங்கிள் என்ட்ரி விசாவை வைத்திருப்பவர், விசாவைப் பெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் UAE-க்குள் நுழைய வேண்டும் மற்றும் நுழைந்த தேதியிலிருந்து 90 நாட்கள் வரை மட்டுமே தங்கியிருந்து சிகிச்சை பெற முடியும். ஆனால், மல்டிபிள் என்ட்ரி விசா மூலம், விசாவைப் பெற்ற 60 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழையும் நபர், 90 நாட்கள் வரை சிகிச்சை பெற்ற பின்னரும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலையில், நோயாளியின் உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால், தங்கும் காலத்தை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுபோலவே, அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய இடங்களில் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு நோயாளிகள், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) மூலம் மருத்துவ சிகிச்சை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இங்கும் சிகிச்சைக்காக வருபவர்களுக்காக ஒற்றை நுழைவு மற்றும் பல நுழைவு என இரண்டு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன.

UAE மருத்துவ சிகிச்சை விசாவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

— நோயாளியின் பாஸ்போர்ட் நகல்
— லைசன்ஸ் பெற்ற மருத்துவமனையிடமிருந்து வருகைக்கான காரணங்களை விளக்கும் ஒரு கடிதம்.
— நிதி பாதுகாப்பை நிரூபிக்க சமீபத்திய வங்கி அறிக்கை (Bank Statement)
— நோயாளியுடன் வருபவரின் பாஸ்போர்ட் நகல் (Companion Passport Copy)
— நோயாளியுடன் வருபவரின் உடல்நலக் காப்பீடு (Companion insurance)

Related Articles

Back to top button
error: Content is protected !!