ADVERTISEMENT

UAE: 2022-ம் ஆண்டில் மட்டும் 32,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய துறை..!!

Published: 15 Feb 2023, 7:50 PM |
Updated: 15 Feb 2023, 9:02 PM |
Posted By: Menaka

கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக மீண்டும் எல்லைகளை விரைவாக திறந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். மேலும், கொரோனாவிற்குப் பிறகு தொடங்கப்பட்ட ‘revenge travel’ என்ற திட்டம் பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. எனவே, இது அமீரகத்தில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலக பயண மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2022 இல் துபாய் மற்றும் அபுதாபியில் இது தொடர்பான வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 305,000 ஐ எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொற்றுநோய்க்கு முன்பு இருந்த அதே அளவாகும். அத்துடன் 2021 இல் இத்துறையில் பணிபுரிந்த 273,000 பேருடன் ஒப்பிடும்போது, ​​கடந்த ஆண்டு 32,000 வேலை வாய்ப்புகளை கூடுதலாக உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டே ஆண்டுகளில் உலகளாவிய சுற்றுலாத் தலமாக துபாய் உருவெடுத்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விடுமுறை இடமாக ட்ரிப் அட்வைசர் டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகள் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 2022 இல் சுற்றுலாப் பயணிகளுக்கான மிகவும் கவர்ச்சிகரமான 2வது நகரமாக Euromonitor ஆல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து WTTC இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) ஜூலியா சிம்ப்சன் அவர்கள் கூறுகையில், அமீரகத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு தொடர்ந்து பிரபலாமாகி வருவதாகவும், அவை தொற்றுநோயால் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் நம்பமுடியாத விரைவான வளர்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த அளவிலான சுற்றுலாத் தலங்களை சர்வதேசப் பயணிகளுக்குத் தொடர்வதால் அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத் துறை மீட்சிப் பாதையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரங்கள், வேலைகள் மற்றும் வணிகங்களுக்கான பயண மற்றும் சுற்றுலாவின் பொருளாதார முக்கியத்துவத்தை தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் தொடர்ந்து அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், துபாய் மற்றும் அபுதாபி எமிரேட்டுகளின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு பாதிக்கு மேல் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேவேளை, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறையின் படி (Dubai Economy and Tourism), 2022-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 97 சதவிகிதம் உயர்ந்து 14.36 மில்லியனாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இது தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில் பதிவான 16.73 மில்லியனை விடக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.