அமீரக செய்திகள்

UAE: துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்களும் நன்கொடை அளிக்கலாம்.. நன்கொடை வழங்குவது எப்படி..??

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் திங்கள்கிழமை முதல் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களினால் பல கட்டிடங்கள் சிதைந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும்பாலானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்க அரசாங்கத்தின் மனிதாபிமானப் பிரிவான எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட்டின் இணையதளத்தைப் பயன்படுத்தி நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், PayPal, கிரெடிட் கார்டு, வங்கி பரிமாற்றம் அல்லது SMS மூலமாகவும் சிரியா மற்றும் துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் நன்கொடை பக்கத்தை https://www.emiratesrc.ae/relief/default.aspx?BR_ID=AJ என்ற லிங்க் சென்று அணுகி நன்கொடை அளிக்கலாம்.

மேலும், நிதியுதவி வழங்க விரும்பும் மக்கள் https://campaigns.shjc.ae/en/relief/ என்ற லிங்கைப் பயன்படுத்தி ஷார்ஜா சாரிட்டி இன்டர்நேஷனல் இணையதளம் மூலமாகவும் பணத்தை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 20,000க்கும் அதிகமான உயிர்களை இயற்கையின் பசிக்கு இரையாக்கிய நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்க முற்படும் அமீரகம், எதிர்வரும் சனிக்கிழமை (பிப்.11) அன்று எக்ஸ்போ சிட்டியில் உள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையம் மற்றும் துபாய் கண்காட்சி மையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிவாரணப் பொருள்களை சேகரித்து உதவி கரம் வழங்க தயாராகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த முயற்சிக்கு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (Ministry of Foreign Affairs and International Co-operation) மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Community Development) ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை, சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை, கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளை, முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் மற்றும் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனம் போன்றவை ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

அதேசமயம், துபாயின் அல் கூஸில் உள்ள சேகரிப்பு மையத்தில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உணவு, குளிரைத் தாங்கிக்கொள்ள உடைகள் (Sweater), மற்றும் படுக்கை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க பொதுமக்கள் குவிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வாரம் அபுதாபியில் உள்ள துருக்கிய தூதரகத்தில் இதேபோன்ற சேகரிப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள், துருக்கி – சிரிய எல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நூறு மில்லியன் டாலர்களை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். அதுபோல, சிரியாவில் உள்ள மக்களுக்கு உதவ முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் மூலம் திங்களன்று, துபாயின் துணைத் தலைவரும் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அவர்கள், 50 மில்லியன் திர்ஹம்கள் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!