ADVERTISEMENT

துபாய்: புதிதாக மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த அமீரக அமைச்சர்… “இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடு” என்று உரை…

Published: 1 Feb 2023, 6:12 PM |
Updated: 1 Feb 2023, 6:15 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் மாண்புமிகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்கள் துணைத் தூதரக வளாகத்தில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்துள்ளார். மேலும், UAE-விற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் மற்றும் துபாயில் உள்ள இந்திய கன்சல் ஜெனரல் டாக்டர் அமன் பூரி ஆகியோர் அமைச்சருடன் இணைந்து காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அகிம்சை வழியில் இந்தியாவிற்கு விடுதலை கிட்ட வழிவகுத்த காந்தியின் 75 வது ஆண்டு நினைவு நாள், இந்தியாவில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமீரகத்தில் அந்த மாமனிதரின் சிலையை திறந்து வைத்து கொண்டாடியதற்காக இந்திய தூதரகங்களுக்கும் சமூகத்திற்கும் நன்றி கூறிய அமைச்சர் ஷேக் நஹ்யான், காந்தியின் பெருமைகளைப் பற்றி உரையாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடுஎன்பதில் பெருமிதம் கொள்வதாகவும் அந்நாட்டு மக்களுடன் நீண்ட, வளமான நல்லுறவை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் UAE-யின் தேசத் தந்தை என்று கருதப்படும் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடன் காந்தியை ஒப்பிட்டுக் கூறியுள்ளார். மேலும் இருவருக்கும் இடையே உள்ள கொள்கை ஒற்றுமைகளையும் விளக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சி குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய தூதர் சுதிர் அவர்கள், இந்தியா மற்றும் UAE ஆகிய இரு நாடுகளும் இங்கு காந்தி-சயீத் அமைதி மையத்தை (Gandhi-Zayed Peace Centre) அமைக்க நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மையமானது அல் ஐனில் உள்ள UAE பல்கலைக்கழகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை விரைவில் முடிக்க இரு தரப்பினரும் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சுதிர் அவர்கள் காந்தி குறித்து கூறுகையில், இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள ஒரே நபர் காந்தி மட்டும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் மறைந்தும் அனைவர் மனதிலும் வசிக்கும் ஷேக் சயீதைப் பற்றியும் இங்குள்ள 3.5 மில்லியன் இந்தியர்கள் உணர்வார்கள் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தூதர் சுதிர் அவர்களின் உரையை அடுத்து பேசத் தொடங்கிய டாக்டர் அமன் பூரி அவர்கள், 42 அங்குல அளவு கொண்ட காந்தியின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்திய கலைஞரும் சிற்பியுமான நரேஷ் குமாவத் அவர்கள் செதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே, அபுதாபியில் உள்ள தூதரகத்தில் ஒரு சிலை உள்ளது. தற்போது இந்த புதிய சிலையானது அவரது உன்னத எண்ணங்களை நினைவுகூற மற்றொரு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியின் விருப்பமான பஜனைகளான ‘வைஷ்ணவ் ஜான் தோ’, ‘ரகுபதி ராகவா’ ஆகிய பாடல்களை பாடகர் சோம்துத்தா பாசு வாசித்துள்ளார் என்பது குரிப்பிடத்தக்கதாகும்.