அமீரக செய்திகள்

UAE: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் டிரைவிங் லைசென்ஸ், வாகன உரிமம் வழங்கும் சேவைகள்.. புதிய அறிவிப்பு வெளியீடு..!!

அபுதாபி எமிரேட்டில் வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் கார் ரிஜிஸ்டிரேசன் சேவைகளை இனிமேல் அபுதாபியின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான, நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre – ITC) கையாளும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தற்போது இந்த சேவைகள் இரண்டும் அபுதாபி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அபுதாபி முழுவதும் ஒரே மாதிரியான மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து உரிம சூழலை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போது இந்த சேவைகள் ITC-க்கு மாற்றப்படவுள்ளதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் (Abu Dhabi Government Media Office) அறிவித்துள்ளது.

அதுபோல, ITC இல் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த சேவை விரிவாக்கம் பயனர்களின் அனுபவங்களை மேம்படுத்தவும், திருப்தி விகிதங்களை அதிகரிக்கவும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அபுதாபி ஊடக அலுவலகம் கூறியுள்ளது. மேலும் அபுதாபியில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பொருளாதாரத்தில் அனைத்துத் துறைகளின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் ஏற்றவாரு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அபுதாபி ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சேவை மாற்றம் செயல்படுத்தப்படும் போது, பயனாளர்களுக்கு எந்தவித தடையுமின்றி சேவைகளை வழங்க அபுதாபி காவல்துறை தலைமையகத்துடன், ITC இணைந்து பணியாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சேவை மாற்றம் முடியும் வரை, தற்போதுள்ள லைசென்ஸ் சென்டர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இந்த சேவைகள் பயன்பாட்டிற்காக தொடர்ந்து இருக்கும் எனவும் ITC உறுதியளித்துள்ளது.

இது குறித்து ITC வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளை அதே தரத்தில் விரைவாக முடித்துத் தருவதே எங்களின் முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சேவை மாற்றத்திற்கான சரியான காலக்கெடுவை ITC வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ITC-யின் பங்களிப்பு:

தற்போது, அபுதாபி காவல்துறையால் நடத்தப்படும் நியமிக்கப்பட்ட உரிம மையங்களில், ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உரிமங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெறலாம் என்றும், தனிப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு அபுதாபி அரசாங்கத்தின் TAMM தளத்தின் மூலம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்டில் ITC ஏற்கனவே, பொது பஸ் நெட்வொர்க், டாக்சிகள், டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் சவாரி பகிர்வு தளங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற போக்குவரத்து தொடர்பான நடைமுறைகளைக் கையாண்டு வரும் நிலையில், தற்போது வாகன மற்றும் உரிமச் சேவைகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அபுதாபியில் கனரக வாகன செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களை சிறப்பாக கண்காணிக்க, அசாடீல் (Asateel) என்ற புதிய தளத்தையும் ஆணையம் அமைத்தது.

மேலும், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) கீழ்வரும் எமிரேட்டின் சாலை நெட்வொர்க்குகளை மேம்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவது ITC யின் பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!